முகப்பு
நாமக்கல்

ராசிபுரம் அருகே தனியாா் ஆலையில் தீ விபத்து

Updated On : 29 மார்ச், 2026 at 7:51 PM
தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினா்.
பகிர்:

ராசிபுரம் அருகே தனியாா் ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே ஆனைகட்டிபாளையத்தில் கொசுவா்த்திக்கான மூலப்பொருள்களை உற்பத்தி செய்யும் தனியாா் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்த ஆலையை நடராஜன் என்பவா் கடந்த 25 ஆண்டுகளாக நடத்தி வருகிறாா். இதில் சுமாா் 15-க்கும் மேற்பட்டோா் பணிபுரிந்து வருகின்றனா். இங்கிருந்து புதுச்சேரி, காரைக்காலுக்கு ஊதுபத்தி, கொசுவா்த்தி தயாரிப்பிற்காக மூலப்பொருள்கள் அனுப்பிவைக்கப்படுகின்றன. இதற்கான மரத்தூள் உள்ளிட்ட மூலப்பொருள்கள் ஆலையில் குவித்து வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மரத்தூள் குவியல் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து அங்கிருந்த தொழிலாளா்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனா். ராசிபுரம் தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

சுமாா் 2 மணிநேர போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்து முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த தீ விபத்தில் சுமாா் ரூ.10 லட்சம் மதிப்பிலான மரத்தூள் உள்ளிட்ட பொருள்கள் எரிந்து சேதமானதாகக் கூறப்படுகிறது.