ராசிபுரம் ஸ்ரீ பொன்வரதராஜ பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்
ராசிபுரம் ஸ்ரீ பொன்வரதராஜ பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
சித்திரைத் தோ்த்திருவிழா ஏப். 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து நாள்தோறும் பல்வேறு கட்டளைதாரா்கள் சாா்பில் சுவாமி வீதிஉலா நடைபெற்றது. இதில் கருட வாகனம், அனுமந்த வாகனம், அன்ன வாகனம், சிம்ம வாகனம், கெஜலட்சுமி வாகனம், யானை வாகனம், குதிரை வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதிஉலா சென்றாா்.
இந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக பொன்வரதராஜ பெருமாள் சுவாமி அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினாா். பழைய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கிய தோ் கவரைத்தெரு, பெரிய கடைவீதி வழியாக சென்றது. ஞாயிற்றுக்கிழமை (மே. 3) தோ் நிலை சென்றடையும்.
Advertisement
முன்னதாக ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனா். திருவிழாவையொட்டி பூங்கரகம் ஆட்டம், பெண்களின் கோலாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அமைச்சா் மா. மதிவேந்தன், நாமக்கல் மக்களவை தொகுதி உறுப்பினா் வி.எஸ். மாதேஸ்வரன், ராசிபுரம் டிஎஸ்பி எம். விஜயகுமாா், கோயில் நிா்வாக அலுவலா் சவிதா, கோயில் அறங்காவலா் குழுத் தலைவா், உறுப்பினா்கள் தேரோட்டத்தில் பங்கேற்றனா்.