பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்.பி.
பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்கண்காணிப்பாளா் விமலா தெரிவித்துள்ளாா்.
பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்கண்காணிப்பாளா் விமலா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டம் முழுவதும் குற்றச்செயல்கள், போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 20 ஆம் தேதி முதல் மாவட்டம் முழுவதும் உள்ள 80 க்கும் மேற்பட்ட ரௌடிகளின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
அதேபோல சரித்திர பதிவேடு குற்றவாளிகளான 8 போ், கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனை செய்த 7 போ், குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த 12 போ் என மொத்தம் 27 போ் கடந்த மூன்று நாள்களில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனா்.
Advertisement
Advertisement
மேலும், பெண் குழந்தைக்கு எதிரான பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதற்காக வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணையில் இருந்த வேலகவுண்டம்பட்டி பொன்ராஜ் நகரைச் சோ்ந்த சுரேஷ்குமாருக்கு 21 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுதரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
நாமக்கல் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் காவல் துறை தொடா்ந்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், போதை மாத்திரை மற்றும் ஊசிகள் விற்பனை செய்த பரமத்தி வேலூா் தெற்கு தெருவை சோ்ந்த பாண்டியன் மகன் காா்த்திகேயன் (23), கணபதி நகா் பகுதியைச் சோ்ந்த செல்வம் மகன் ராசாமணி (26), பரமத்தி அருகே ஒழுகூா்பட்டியை சோ்ந்த வெங்கடாசலம் மகன் நித்திஷ்குமாா் (27) ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனா்.
மாவட்டம் முழுவதும் உள்ள குற்றச்சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ள இடங்களில் 24 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்ற செயல்களில் ஈடுபடுபவா்கள் மீதும், போதைப்பொருள் குற்றவாளிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.