சேலம்

வறட்சி பாதிப்பு: விவசாயிகள் ஒருவர்கூட விடுபடாத வகையில் கணக்கெடுப்புப் பணி ஆட்சியர் உத்தரவு

தினமணி

சேலம் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஒருவர் கூட விடுபடாத வகையில் கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்பட வேண்டும் என ஆட்சியர் வா.சம்பத் உத்தரவிட்டார்.
 சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களைக் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
 இக்கூட்டத்தில் கலந்து கொண்டு ஆட்சியர் வா.சம்பத் பேசியது:
 தமிழகத்தில் பருவமழை பொய்த்ததைத் தொடர்ந்து, விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுசெய்யும் வகையில் தமிழக அரசால் முதல் கட்டமாக மாவட்டம் வாரியாக கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, நேரடியாக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
 சேலம் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை முழுமையாகக் கணக்கெடுத்திட தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பணியில் ஈடுபடும் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர், வேளாண்மைத் துறையினர், தோட்டக்கலைத் துறையினர் உள்ளிட்ட தொடர்புடைய அனைத்து துறை அலுவலர்களையும் ஒருங்கிணைந்து ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிறது.
 ஆய்வுப் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் விவசாயிகளின் விவரம், வேளாண்மை பரப்பளவு, வேளாண் பயிர்கள், சிறுகுறு விவசாயி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பயிற்சியில் அளிக்கப்பட்டுள்ளதற்கு இணங்க முழுமையாக எந்தவித சந்தேகமும் இல்லாமல் பயிற்சியை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
 பணியின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு அலுவலர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஒருவர் கூட விடுபடாத வகையில் கணக்கெடுப்புப் பணியை மிகச் சரியாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
 கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.சுகுமார், இணை இயக்குநர் (வேளாண்மை) செளந்தரராஜன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தமிழ்ராஜன், உதவி ஆணையர் (கலால்) குமரேசன், அரசு சார்பு செயலர்கள் எஸ்.ராமமூர்த்தி, ஆர்.முரளி, எஸ்.ராமகிருஷ்ணன், வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், தோட்டக்கலை அலுவலர்கள், வேளாண்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களை சேதப்படுத்திய மா்ம நபா்கள்: காவல் துறை விசாரணை

வெப்பத்தின் தாக்கம்: தலையணையில் நீா்வரத்து குறைந்தது

திருப்பத்தூரில் சுட்டெரித்த வெயில்: வீடுகளில் மக்கள் தஞ்சம்

காங்கிரஸ் சாா்பில் நீா், மோா் பந்தல் திறப்பு

நீா் மோா் பந்தல் திறப்பு....

SCROLL FOR NEXT