சேலம்

தமிழகத்தில் தேர்தல் வரவேண்டும் என பாஜக விரும்பவில்லை

DIN

தமிழகத்தில் தேர்தல் வர வேண்டும் என்று பா.ஜ.க. விரும்பவில்லை என்று அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சேலம் மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தியாக பா.ஜ.க. மாறி வருகிறது. தமிழகத்தில் மணல் கொள்ளை நடப்பதால் அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால், அரசே நடத்துவதில்தான் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்து வருகிறது. அதேபோன்று டாஸ்மாக் மது விற்பனையிலும் பெரிய அளவில் ஊழல்கள் நடந்து வருகின்றன. ஒரு மதுப் புட்டியை ரூ.10 வரை கூடுதல் விலைக்கு விற்றும், கூடுதல் நேரம் கடையைத் திறந்து வைத்தும் ஊழல் செய்து வருகின்றனர்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறாரோ இல்லையோ, அதற்குள் மு.க.ஸ்டாலின், திருமாவளவன் போன்றவர்கள் அவர் பா.ஜ.க.வுடன் சேரக் கூடாது என்று கூறுகிறார்கள். பா.ஜ.க.வைப் பார்த்து அவர்கள் ஏன் பதறுகிறார்கள். ஆவியைக் கண்டு பயப்படுவதுபோல மற்ற கட்சியினர் காவியைக் கண்டு பயப்படுகின்றனர். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழகத்துக்கு எண்ணற்ற திட்டங்களை வழங்கி வருகிறது. ஆனால், தமிழக அரசு அவற்றைப் பயன்படுத்தாமல் தவறி வருகிறது.
விவசாயத்துக்கு அளித்த சொட்டுநீர்ப் பாசனம், பயிர்ப் பாதுகாப்புத் திட்டம், நீர்நிலைப் பாதுகாப்பு போன்ற திட்டங்களை தமிழக அரசு பயன்படுத்தவில்லை. அதனால், விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு 4 ஆயிரம் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் பத்தாயிரம் வீடுகள் கட்டப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகள் சேர்க்கையில் குழப்பங்கள் உள்ளன. அதனால், தமிழக அரசு நிர்வாகம் செயலற்று உள்ளது. தமிழகத்தில் தேர்தல் வரவேண்டும் என்று பா.ஜ.க. விரும்பவில்லை. தமிழக மக்களுக்கு நல்ல நிர்வாகம் கிடைக்கவில்லை என்றால் தேர்தல் வரும் என்பதை ஆளுபவர்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.
அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியுடன் தேர்தல் கூட்டணி குறித்து இப்போது பேசத் தேவையில்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

SCROLL FOR NEXT