போலீஸ் போல நடித்து பேருந்து நடத்துநரிடம் பணம் பறிக்க முயற்சி: ஒருவர் சிக்கினார்
சேலத்தில் போலீஸ் போல நடித்து பேருந்து நடத்துநரிடம் ரூ.23 ஆயிரம் பணத்தைப் பறிக்க முயன்றதாக ஒருவரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சேலத்தில் போலீஸ் போல நடித்து பேருந்து நடத்துநரிடம் ரூ.23 ஆயிரம் பணத்தைப் பறிக்க முயன்றதாக ஒருவரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (40). இவர் சேலம் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராக உள்ளார். இதனிடையே சனிக்கிழமை இரவு சேலம் புதிய பேருந்து நிலையத்துக்கு வந்த சரவணன், தனது சம்பள பணத்தை எடுக்க அருகில் உள்ள ஏ.டி.எம். மையத்து சென்றுள்ளார்.
பணத்தை எடுத்துவிட்டு வெளியே வந்த சரவணனிடம், வெளியில் காத்திருந்த இருவர் தங்களை குற்றப் பிரிவு போலீஸார் எனக் கூறி கொண்டனர். மேலும் சரவணன் மீது சந்தேகம் இருப்பதாகக் கூறி விசாரணைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறினர்.
மேலும் பணிமனை அருகே சென்றதும் சரவணனிடம் இருந்து ரூ.23 ஆயிரம் பணத்தை பறிக்க முயன்றனர். இதில் சந்தேகமடைந்த சரவணன், திருடன் திருடன் என கூச்சலிட்டார். உடனே அருகில் இருந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும், பொதுமக்களும் இருவரையும் விரட்டி பிடிக்க முயன்றனர். இதில் ஒருவர் மட்டும் சிக்கினார். மற்றொரு நபர் தப்பி ஓடிவிட்டார்.
விசாரணையில், திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த ரவிசங்கர் என்பது தெரியவந்தது. இவரும், சென்னையைச் சேர்ந்த ஜார்ஜ் என்பவரும் சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கி போலி போலீஸ் அதிகாரியாக நடித்து பணப் பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து பள்ளப்பட்டி போலீஸார் அந்த விடுதிக்கு சென்றனர். ஆனால், அங்கு அறை எடுத்து தங்கியிருந்த ஜார்ஜ் அறையை காலி செய்துவிட்டு தலைமறைவானது தெரியவந்தது. இதனிடையே போலீஸில் சிக்கிய ரவிசங்கர் மீது ஏற்கெனவே சேலம் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் மோசடியில் ஈடுபட்டதாக ஒரு வழக்கு நிலுவையில் உள்ளதாகப் போலீஸார் தெரிவித்தனர். அவரிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. தலைமறைவான மற்றொரு நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.