முகப்பு
சேலம்

சேலத்தில் அங்கன்வாடி மையங்களுக்கு எரிவாயு இணைப்பு வழங்க நடவடிக்கை: ஆட்சியர் ரோகிணிராம்தாஸ்

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களுக்கும் எரிவாயு இணைப்பு விரைந்து வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று ஆட்சியர் ரோகிணிராம்தாஸ் தெரிவித்துள்ளார்.    

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:18 PM
பகிர்:

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களுக்கும் எரிவாயு இணைப்பு விரைந்து வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று ஆட்சியர் ரோகிணிராம்தாஸ் தெரிவித்துள்ளார்.    
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட அளவிலான கண்காணிப்பு மற்றும் முறைப்படுத்தும் குழு ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. எம்.எல்.ஏ.க்கள் செம்மலை, வெற்றிவேல், ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
இதில், ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் பேசியது:
சேலம் மாவட்டத்தில்  மொத்தம் 22 வட்டாரங்களில் 2,543 முதன்மை அங்கன்வாடி மையங்கள், 153 குறு அங்கன்வாடி மையங்கள் என மொத்தம் 2,696 அங்கன்வாடி மையங்கள் மூலம் அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 
சேலம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் மூலம் 1,174 கட்டடப் பணிகள் ஒதுக்கப்பட்டு 526 பணிகள் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 449 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 1,468 அங்கன்வாடி மையங்களில் மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது. 
மீதமுள்ள அங்கன்வாடி மையங்களில் விரைவில் மின் வசதி வழங்கப்படவுள்ளது. 2,696 அங்கன்வாடி மையங்களில் 2,315 அங்கன்வாடி மையங்களில் எரிவாயு இணைப்பு வழங்குவதற்கு நிர்வாக அனுமதிபெறப்பட்டு எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 
மீதமுள்ள 381 அங்கன்வாடி மையங்களில் நிதி ஒதுக்கீடு பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அங்கன்வாடி மையங்களில் உள்ள சிறிய பழுதுகள், பெரிய பழுதுகள் மற்றும் குழந்தை நேயக் கழிப்பிட பணிகள் 596 மையங்களில் முடிக்கப்பட்டுள்ளன.
மேட்டூர்,  சங்ககிரி, ஓமலூர் ஆகிய தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர்கள் அங்கன்வாடி மையங்களில் ஆய்வுப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அங்கன்வாடி மையங்களில் இணை உணவு முறையாக வழங்கப்படுவதைக் கண்காணிக்கப்பட வேண்டும் என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகள் மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்கி உள்ளனர். 
அவர்களின் கருத்துக்களின் மீது தனி கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் அருள்ஜோதிஅரசன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட இயக்குநர் தேவிகுமாரி, உதவித் திட்ட அலுவலர் கண்ணன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →