முகப்பு
சேலம்

பெரியார் தொலைநிலைக் கல்வியில் ஆன் லைன் மூலம் மாணவர் சேர்க்கை முறை அறிமுகம்

பெரியார் தொலைநிலைக் கல்வி நிறுவனம் மாணவர் சேர்க்கையை ஆன்லைன் மூலம் நிர்வகிக்கும் புதிய நடைமுறையைப் பல்கலைக்கழகத்

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

பெரியார் தொலைநிலைக் கல்வி நிறுவனம் மாணவர் சேர்க்கையை ஆன்லைன் மூலம் நிர்வகிக்கும் புதிய நடைமுறையைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் பொ.குழந்தைவேல்  செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.
பெரியார் பல்கலைக்கழகத்தில் இயங்கிவரும் பெரியார் தொலைநிலைக் கல்வி நிறுவனத்தின்(பிரைட்) தமிழகப் படிப்பு மைய ஒருங்கிணைப்பாளர்களின்  கூட்டம் துணைவேந்தர்  பொ.குழந்தைவேல்  தலைமையில் நடைபெற்றது.  அக் கூட்டத்தில் பேசிய துணைவேந்தர்  "தமிழகமெங்கும் இயங்கி வரும்  பெரியார் பல்கலைக்கழகப் படிப்பு மையத்தின் மாணவர் சேர்க்கையை முறைப்படுத்தி எளிமைப்படுத்தும் வண்ணம் ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளும் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்துகிறோம்.  இனி மாணவர்களின் சேர்க்கையை ஆன்லைன் மூலமே மேற்கொள்ள இயலும். கல்விக் கட்டணம்,  தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட அனைத்துக் கட்டணங்களையும் ஆன்லைன் மூலமே செலுத்தலாம்.  இதனால் மாணவர்கள்,  ஒருங்கிணைப்பாளர்கள் இருந்த இடத்திலிருந்தே மாணவர் சேர்க்கையை நிர்வகிக்கலாம்.  படிப்படியாக தொலைநிலைக் கல்வி நிறுவனத்தின் அனைத்துப் பரிவர்த்தனைகளும் முழுமையாக ஆன்லைன் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்படும்.  பல்கலைக்கழக மானியக் குழுவின் தொலை நிலைக் கல்விக்கான விதிகளை முழுமையாக அமல் நடத்தும் வண்ணம்,  பிரைடுக்கான புதிய விதிகளை உருவாக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.  அப் புதிய விதிகள் பிரைடில் விரைவில் அமல்படுத்தப்படும். பிரைடில் கல்வி பயிலும் மாணவர்கள் தெரிவிக்கும் குறைகளைக் களைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  பெரியார் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வியில் மாணவர் சேர்க்கை முதல் பட்டம் பெறும் வரை உரிய விதிகளின்படி வெளிப்படையான நிர்வாகம் நடைபெறுவது  உறுதி செய்யப்படும்.  படிப்பு மைய ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவிக்கும் நியாயமான குறைகள் கண்டிப்பாகத் தீர்க்கப்படும்' என்றார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பெரியார் தொலைநிலைக் கல்வி நிறுவன இயக்குநர் முனைவர் பி.ஜி. புவனலதா,  பேராசிரியர் ஆர். பாலகுருநாதன்,   முனைவர் பி. பிரகாஷ்  உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
 

முழு கட்டுரையைப் படிக்க →