தமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல்: சேலத்தில் 1,532 வாக்குகள் பதிவு
தமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக சேலம் நீதிமன்றத்தில் நடைபெற்ற தேர்தலில் 1,532 வாக்குகள் பதிவாயின.
தமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக சேலம் நீதிமன்றத்தில் நடைபெற்ற தேர்தலில் 1,532 வாக்குகள் பதிவாயின.
தமிழ்நாடு -புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு 25 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் புதன்கிழமை நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் 192 பேர் போட்டியிடுகின்றனர்.
சேலத்தைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் கௌதம பூபாலன், அய்யப்பமணி, காந்தி, சம்பத், சரவணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டு தேர்தல் நடைபெற்றது.
சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி மோகன்ராஜ் நியமனத்தின் பேரில் மாவட்ட கூடுதல் நீதிபதி ரவீந்திரன், சார்பு நீதிபதி ராதாகிருஷ்ணன் ஆகியோரும், பார் கவுன்சில் சார்பில் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி வேணுகோபால், வழக்குரைஞர் ஜெகநாதன், மணிவாசகம், ராஜா ஆகியோர் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர்.
இதில் சேலத்தில் 1,634 வழக்குரைஞர்கள் வாக்களிக்கத் தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் வடக்குத் தொகுதி திமுக எம்எல்ஏ வழக்குரைஞர் ஆர்.ராஜேந்திரன், திமுக தேர்தல் பணிக் குழு செயலர் எஸ்.ஆர்.பார்த்திபன், வழக்குரைஞர் குணசேகரன் ஆகியோர் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
இதனிடையே, நீதிமன்ற வளாகத்துக்குள் வழக்குரைஞர் முகமது யாகூப், நீதி தேவதை சிலை முன் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டார். பின்னர் திடீரென தான் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெயை ஊற்றித் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், முறையாகப் படித்து பார் கவுன்சிலில் பதிவு செய்த போதிலும், வேண்டுமென்றே வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்காமல் புறக்கணிக்கப்பட்டிருக்கிறேன். தனக்கு வாக்குரிமை வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
இதனிடையே, மாலை 5.40 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 1,532 வாக்குகள் பதிவாயின. 102 பேர்வாக்களிக்கவில்லை. இதையடுத்து, தேர்தல் அலுவலர்கள், வேட்பாளர்கள் உள்ளிட்டோர் முன்னிலையில் வாக்குப்பெட்டிக்கு சீல் வைத்து பூட்டப்பட்டது. இதில் வேட்பாளர்கள், உள்ளூர் போலீஸார் மூலம் சென்னைக்கு வாக்குப்பெட்டியை எடுத்துச் செல்லக்கூடாது. மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் மூலம் மட்டுமே வாக்குப் பெட்டியை எடுத்துச் செல்ல வேண்டும் என வலியுறுத்தியதால் அங்கு சிறிய சலசலப்பு ஏற்பட்டது.
பின்னர் நீதிமன்றப் பாதுகாப்பு அறையில் வாக்குப்பெட்டி பாதுகாப்பாக வைக்கப்பட்டு மூன்று ஆயுதம் ஏந்திய போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவர் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வேட்பாளர்கள் உள்ளிட்டோர் சமரசம் அடைந்தனர். சென்னையில் இருந்து சிறப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு, வாக்குப்பெட்டி எடுத்துச் செல்லப்படும். வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது என மூத்த வழக்குரைஞர் மணிவாசகம் தெரிவித்தார்.