ஓமலூர் பகுதியில் கால்நடை தீவனப் பயிர் விலை வீழ்ச்சி
ஓமலூர் வட்டார பகுதிகளில் கால்நடைகளின் உன்னத தீவனமான சோளத்தட்டு பயிர்களுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஓமலூர் வட்டார பகுதிகளில் கால்நடைகளின் உன்னத தீவனமான சோளத்தட்டு பயிர்களுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் தற்போது கடும் கோடையால் வெப்பம் மிகுந்த நிலை ஏற்பட்டு வருகிறது. கால்நடைகளை வளர்க்க முடியாமல் தவித்து வருகின்றனர். ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் ஆகிய வட்டாரங்களில் கால்நடைகளின் பசும் தீவனமான சோளத்தட்டு பயிர் அதிகமாக விதைக்கப்பட்டுள்ளது. மேலும், நடப்பாண்டு சுமார் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களில் சோளத்தட்டு சாகுபடி செய்துள்ளனர்.
தற்போது, இதைத் தொடர்ந்து ஓமலூர் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில், அறுவடை நடைபெற்று வருகிறது. ஆனால், வியாபாரிகள், சோளத்தட்டு கொள்முதல் செய்வதில் ஆர்வம் காட்டாததால், விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்தப் பகுதிகளில் நல்ல விளைச்சலைக் கொடுத்துள்ள சோளம் ஒரு ஏக்கரில், 60 முதல், 70 கட்டு சோளத்தட்டு அறுவடை செய்யும் அளவுக்குப் பயிர்கள் நன்றாக உள்ளன.
ஒரு கட்டுக்குத் தொழிலாளர்களுக்கு ரூ. 350 கூலி கொடுக்க வேண்டியுள்ளது. கடந்தாண்டு வறட்சியால், கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறை ஏற்பட்டது. அதனால், திருப்பூர், பல்லடம், காங்கேயம் உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து, வியாபாரிகள், ஓமலூர் வட்டாரப் பகுதிகளில் அதிகமாக கொள்முதல் செய்து சென்றனர்.
அப்போது ஒரு கட்டு ரூ.1,200 வரை கொள்முதல் செய்தனர். ஆனால், நடப்பாண்டு பருவமழை பொய்த்ததால் தீவனப் பற்றாக்குறை ஏற்படவில்லை. கடந்தாண்டு, ரூ.1,200-க்கு விற்ற ஒரு கட்டு சோளத்தட்டு தற்போது ரூ.500 என விலை சரிந்துள்ளது. அதையும் வாங்க ஆளில்லாததால் வயலிலேயே அறுவடை செய்யாமல் விவசாயிகள் விட்டுள்ளனர். அதனால், இந்த முறை சோளம் விதைத்த விவசாயிகளுக்கு பெருமளவில் நஷ்டமே ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.