பச்சிளம் குழந்தையை ரயில் நிலையத்தில் வீசிச் சென்ற பெண்
பிறந்து 10 நாள்களே ஆன பச்சிளம் குழந்தையை பெண் ஒருவர் கோவை ரயில் நிலையத்தில் சனிக்கிழமை இரவு வீசிச் சென்றார்.
பிறந்து 10 நாள்களே ஆன பச்சிளம் குழந்தையை பெண் ஒருவர் கோவை ரயில் நிலையத்தில் சனிக்கிழமை இரவு வீசிச் சென்றார்.
கோவை ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடையில், பிறந்து 10 நாள்களே ஆன பச்சிளங் குழந்தையை ஒரு பெண் வீசிவிட்டுச் சென்றார். அப்போது அங்கிருந்த பயணிகள் அவரை விரட்டிப் பிடித்து ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது:
ரயில் நிலையத்தில் குழந்தையை வீசிச் சென்ற பெண், சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்தவர். ஈரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்தபோது அங்கிருந்த இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே கணவன், மனைவியாக வாழ்ந்துள்ளனர்.
அந்தப் பெண் கர்ப்பம் அடைந்ததும் அந்த இளைஞர் அவரைக் கைவிட்டு கோவை வந்துவிட்டார். இந்நிலையில், கடந்த 10 நாள்களுக்கு முன்னர் அந்தப் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. எனவே, கைக்குழந்தையுடன் காதலனைத் தேடி கோவை வந்துள்ளார். அவரைக் கண்டுபிடிக்க முடியாத விரக்தியில், குழந்தையை ரயில் நிலையத்தில் கைவிட்டுச் செல்ல முயன்றுள்ளார் என்றனர். இதையடுத்து, அந்தக் குழந்தை மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளிடமும், அந்தப் பெண் காப்பகத்திலும் ஒப்படைக்கப்பட்டனர்.