வாழப்பாடி பகுதியில் பருவமழையை எதிர்பார்த்து செங்கல் உற்பத்தி நிறுத்தம்: விலை உயர்வு: தொழிலாளர்கள் வேலையிழப்பு
வாழப்பாடி பகுதியில் பருவமழையை எதிர்பார்த்து பெரும்பாலான சூளைகளில் செங்கல்
வாழப்பாடி பகுதியில் பருவமழையை எதிர்பார்த்து பெரும்பாலான சூளைகளில் செங்கல் உற்பத்தியை நிறுத்தியதால், தொழிலாளர்கள், பாரம் ஏற்றுவோர் உள்ளிட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலையிழந்துள்ளனர். செங்கல் விலையும் உயர்ந்துள்ளது.
வாழப்பாடி பேரூராட்சிக்குள்பட்ட மங்கம்மாள்நகர், காளியம்மன்நகர், பாட்டப்பன் நகர், அண்ணாநகர், புதுப்பாளையம் மற்றும் துக்கியாம்பாளையம், பேளூர், சிங்கிபுரம், கொட்டவாடி, மத்தூர், புத்திரகவுண்டன்பாளையம், காரிப்பட்டி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன.
இங்கு உற்பத்தி செய்யப்படும் செங்கற்கள், உள்ளூர் பயன்பாட்டுக்கு மட்டுமின்றி, விழுப்புரம், சென்னை, தாம்பரம், செங்கல்பட்டு உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும் அனுப்பப்படுகிறது. இதனால் செங்கல் அறுப்போர், சூளையில் அடுக்குவோர், வேக வைத்து பதப்படுத்துவோர், பாரம் ஏற்றுவோர், வாகன ஓட்டுநர்கள், விறகு மற்றும், செம்மண் வழங்குவோர் உள்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள், நேரடியாகவும், மறைமுகமாகவும் பயனடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில், வாழப்பாடி பகுதியில் கடந்த இரு மாதங்களாக, வானம் மேக மூட்டத்தோடு காணப்படுவதோடு, ஆங்காங்கே சிறிதளவு மழையும் பெய்து வருகிறது. இதுமட்டுமின்றி, பலத்த பருவமழை பெய்யக் கூடும் என்ற எதிர்பார்ப்பும் செங்கல் சூளை உற்பத்தியாளர்களிடையே நிலவி வருகிறது. இதனால், வாழப்பாடி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் செங்கல் உற்பத்தியை பெரும்பாலான சூளை உரிமையாளர்கள் நிறுத்தி விட்டனர்.
அறுத்து வைக்கப்பட்டுள்ள செங்கற்களையும் தார்ப்பாய் போட்டு மூடி வைத்துவிட்டனர். இதனால் செங்கல் உற்பத்தி தொழிலை நம்பியுள்ள 10 ஆயிரம் தொழிலாளர்கள் கடந்த ஒரு மாதமாக வேலையிழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.
விலை உயர்வு
இதனால் இருப்பில் வைக்கப்பட்டுள்ள செங்கல் விலையை சூளை உரிமையாளர்கள் உயர்த்தி விட்டனர். கடந்த இரு மாதங்களுக்கு முன்பு வரை ரூ.5,500 முதல் 6,000 வரை விலை போன 1000 செங்கற்கள், கடந்த சில தினங்களாக ரூ.6,500 முதல் ரூ. 7,500 வரையிலான விலையில் விற்கப்படுகிறது.
இதுகுறித்து, வாழப்பாடி செங்கல் சூளை தொழிலாளர்கள் கூறியது: வாழப்பாடி பகுதியில் இரு மாதங்களாக வானம் மேக மூட்டத்தோடு காணப்படுகிறது. ஆனால், போதிய மழை பெய்யாமல் ஏமாற்றி வருகிறது. இதனால், செங்கலை அறுத்து சூளையில் வைத்து பதப்படுத்துவதற்கு ஏற்ற சூழல் இல்லாததால், பெரும்பாலான செங்கல் சூளை உரிமையாளர்கள் செங்கல் அறுப்பதை தற்காலிகமாக நிறுத்திவிட்டனர்.
வரும் டிசம்பர் மாதம் வரை மழை நீடிக்கும் என்பதால், ஜனவரி மாதத்தில் தான் மீண்டும் முழுமையான செங்கல் உற்பத்தி தொடங்கி தொடர்ந்து 6 மாதங்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அதுவரை விவசாயம் சார்ந்த கூலி வேலைகளைச் செய்து வருகிறோம் என்றனர்.