சேலம் எல்.ஐ.சி. கோட்டம் ரூ.307 கோடிக்கு முதல் பிரீமியம் இலக்கை அடைந்து சாதனை
சேலம் எல்.ஐ.சி. கோட்டம் கடந்த நிதியாண்டில் பிரீமியம் அளவில் ரூ.307.54 கோடிக்கு முதல் பிரீமியம் இலக்கை அடைந்து சாதனை படைத்துள்ளது.
சேலம் எல்.ஐ.சி. கோட்டம் கடந்த நிதியாண்டில் பிரீமியம் அளவில் ரூ.307.54 கோடிக்கு முதல் பிரீமியம் இலக்கை அடைந்து சாதனை படைத்துள்ளது.
எல்.ஐ.சி. ஆப் இந்தியா 1956 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி அப்போதைய பிரதமர் ஜவாஹர்லால் நேருவால் நாட்டுடைமையாக்கப்பட்டு 62 ஆண்டுகளை பூர்த்தி செய்கிறது.
இதையொட்டி எல்.ஐ.சி. மக்கள் சேவையில் 62 ஆண்டுகள் பூர்த்தி செய்யும் விழாவைக் கொண்டாடும் வகையில் செப்.1 ஆம் தேதி முதல் செப்.7 ஆம் தேதி வரை "காப்பீட்டு வாரம்' அனுசரிக்கப்படுகிறது.
இதை முன்னிட்டு எல்.ஐ.சி. முதுநிலை கோட்ட மேலாளர் எல்.செந்தூர்நாதன் தலைமையில் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் சுப்பாராவ் கலந்து கொண்டார். சேஷாத்ரி, பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டி மற்றும் கருத்தரங்கங்கள் நடத்தப்பட்டன. மேலும், அலுவலக ஊழியர்கள், முகவர்களுக்கான கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
சேலம் நகரிலுள்ள நான்கு கிளைகள் மற்றும் கோட்ட அலுவலகத்திலும் இலவச மருத்துவப் பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உள்பட பல நிகழ்ச்சிகள் மக்கள் நலன் கருதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தென் மண்டல அளவில் சாதனை: சேலம் கோட்டம் கடந்த நிதியாண்டில் பிரீமியம் அளவில் தங்கள் இலக்கான ரூ.251 கோடிகளை கடந்து ரூ.307.54 கோடி முதல் பிரீமியமும், 1,09,976 பாலிசிகள் புது வணிகமும் புரிந்துள்ளது. தென் மண்டலத்தில் முதலாவது கோட்டமாக முதல் பிரீமியம் இலக்கினை அடைந்து சாதனை படைத்துள்ளது. குழுக் காப்பீடுத் திட்டத்தில் 2017-18 ஆம் ஆண்டு இலக்கான மொத்த பிரீமியம் உள்பட அனைத்து இலக்கையும் எட்டி அகில இந்திய அளவில் சாதனை படைத்துள்ளது.
சேலம் கோட்டம் கடந்த நிதியாண்டில் 1,19,980 உரிமங்களை பட்டுவாடா செய்ததின் மூலம் ரூ.414.61 கோடிகளையும் 5,490 இறப்பு உரிமங்களின் மூலமாக ரூ.45.49 கோடியை பாலிசிதாரர்களுக்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.