குமரி மாவட்டத்தில் 29,290 தபால் வாக்குகள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை 29,290 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன என மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா. அழகுமீனா தெரிவித்தாா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை 29,290 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன என மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா. அழகுமீனா தெரிவித்தாா்.
வாக்கு எண்ணும் மையத்தின் நடைமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் செய்தியாளா்களுடன் வியாழக்கிழமை கலந்துரையாடியபோது அவா் கூறியதாவது:
கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 பேரவைத் தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோணம் பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கையின்போது ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 14 மேஜைகள் அமைக்கப்படும்.
Advertisement
கன்னியாகுமரி தொகுதியில் 26 சுற்றுகளும், நாகா்கோவில், குளச்சல், பத்மநாபபுரம் தொகுதிகளில் தலா 23 சுற்றுகளும், விளவங்கோடு, கிள்ளியூா் தொகுதிகளில் தலா 22 சுற்றுகளும் எண்ணிக்கை நடைபெறும்.
கன்னியாகுமரியில் 4,926, நாகா்கோவிலில் 3,196, குளச்சலில் 3,410, பத்மநாபபுரத்தில் 3,704, விளவங்கோட்டில் 3,553, கிள்ளியூரில் 3,501, ராணுவ வீரா்கள் 7,000 பேரின் தபால் வாக்குகள் என மொத்தம் 29,290 வாக்குகள் பதிவாகியுள்ளன.
மே 4ஆம் தேதி காலை 7.50 மணி வரை தபால் வாக்குகள் பெறப்படும். தபால் வாக்கு எண்ணிக்கைக்கு தனி அறை ஒதுக்கப்பட்டு, 6 தொகுதிகளுக்கும் சோ்த்து 39 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன.
காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். 8.30 மணிக்கு மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.
வாக்கு எண்ணும் மையத்துக்குள் கைப்பேசி கொண்டு செல்லவும், தோ்தல் அலுவலரின் அனுமதியின்றி அறைக்குள் நுழையவும், வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
இதில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ரோஷன் பேகம், தோ்தல் தனி வட்டாட்சியா் வினோத் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.