சேலம்

தமிழகத்தில் ராணுவ தளவாட மையங்கள் அமைக்க அரசு ரூ.300 கோடி ஒதுக்க வலியுறுத்தல்

DIN

தமிழகத்தில் ராணுவ தளவாட மையங்கள் அமைக்க சுமார் ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என சேலம் மாவட்ட சிறு, குறுந் தொழிற்சாலைகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
 சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை, சேலம் மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழிற்சாலைகள் சங்கத் தலைவர் கே. மாரியப்பன், துணைத் தலைவர் எம்.வி.செல்லமுத்து ஆகியோர் புதன்கிழமை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
 தமிழக முதல்வரின் சீரிய முயற்சியால் தமிழகத்துக்கு ராணுவ வழித்தடம் அமைக்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் அனுமதி கிடைத்தது. கடந்த 2017 இல் மத்திய நிதி நிலை அறிக்கையில் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் கடந்த இரண்டரை ஆண்டுகளாகியும் தமிழகத்தில் இதற்கான ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளன.
 சேலம், கோவை, திருச்சி, ஒசூர் மற்றும் சென்னைப் பகுதிகளில் ராணுவ தளவாடங்கள் மற்றும் பாகங்கள் தயாரிக்க தமிழக அரசு கொள்கை முடிவெடுத்து, ராணுவ வழித்தடங்களை உருவாக்கத் திட்டம் வகுக்க வேண்டும். உத்தரப் பிரதேசத்தில் இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கிய பிறகு அந்த மாநில அரசு ரூ.360 கோடியை சிறப்பு நிதியாக வழங்கி மூத்த ஐஏஎஸ் அதிகாரியின் தலைமையில் புதிதாக ஒரு துறையை உருவாக்கி முதற் கட்டப் பணிகளை உருவாக்கியுள்ளனர்.
 தில்லியில் இந்தத் திட்டத்தை விரைவுப்படுத்தி செயல்படுத்த ஒரு சிறப்பு அதிகாரியையும் நியமனம் செய்துள்ளனர்.எனவே, தமிழகத்தில் 5 மாவட்டங்களில் ராணுவத் துறைக்கான உற்பத்தி மையங்களையும், ஆய்வு செய்யும் கூடங்களை அமைத்திடவும் ரூ.300 கோடியை தமிழக அரசு ஒதுக்கிட வேண்டும்.
 மேலும், இதற்கென பாதுகாப்புத் துறையில் அனுபவமிக்க மூத்த அதிகாரிகளை நியமித்து 5 பேர் கொண்ட குழு ஒன்றை உருவாக்கிட வேண்டும்.
 சேலம் உருக்காலையில் 300 ஏக்கரில் ஜவுளிப் பூங்கா அமைத்தால் ராணுவ துறையினருக்குத் தேவையான சீருடைகளை உற்பத்தி செய்து, சுமார் ரூ.400 கோடி பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும். இதற்கு முதல்வர் போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT