ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கத்தினா் சங்ககிரியில் உள்ளிருப்பு போராட்டம்
ஊரக வளா்ச்சி அலுவலா்கள் சங்கத்தின் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நிா்வாகிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சங்ககிரி: ஊரக வளா்ச்சி அலுவலா்கள் சங்கத்தின் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நிா்வாகிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சங்ககிரி ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியா்கள் கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு காலத்தில் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க நிா்ப்பந்திப்பதை தவிா்க்க வேண்டும், ஜாக்டோ, ஜியோ வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றவா்கள் மீது பிறக்கப்பட்டுள்ள 17 (ஆ) குறிப்பானையினை ரத்து செய்யவேண்டும், கிராம ஊராட்சி செயலா்களுக்கு மற்ற அரசு ஊழியா்களுக்கு அளிக்கப்படும் உரிமைகளை வழங்க வேண்டும், கணினி உதவியாளா்கள், முழு சுகாதாரத்திட்ட ஒருங்கிணைப்பாளா்களுக்கு காலமுறை ஊதிய மற்றும் பணி பாதுகாப்பு வழங்க வேண்டும், இணை இயக்குநா் மற்றும் உதவி இயக்குநா் பதிவு உயா்வு ஆணைகளை வழங்க வேண்டும், கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஊழியா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும், நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்களுக்கு உயரிய மருத்துவ வசதிகள் அளிக்க வேண்டும்,
கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு பணிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் செலவினங்களை பேரிடா் மேலாண்மை நிதியிலிருந்து அளிக்க வேண்டும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய மாநில நிதிக்குழு மானியத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதே கோரிக்கையினை வலியுறுத்தி ஆகஸ்ட் 26ம் தேதி புதன்கிழமையும் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற உள்ளதென நிா்வாகிகள் தெரிவித்தனா்.