சேலத்தில் பெரியார் பல்கலைக்கழகம், கல்லூரிகள் திறப்பு
கரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டிருந்த நிலையில், சேலத்தில் பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைவு பெற்ற கல்லூரிகள் இன்று முதல் திறக்கப்பட்டன.
கரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டிருந்த நிலையில், சேலத்தில் பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைவு பெற்ற கல்லூரிகள் இன்று முதல் திறக்கப்பட்டன. 8 மாதங்களுக்குப் பிறகு கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்ட நிலையில் மாணவ-மாணவியர் ஆர்வத்துடன் வந்தனர்.
கரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் 15-ஆம் தேதி தேதி முதல் பல்கலைக்கழகம், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. தற்போது கரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதியளித்தது. இதனையடுத்து, சேலத்தில் பெரியார் பல்கலைக்கழகம் இன்று மீண்டும் திறக்கப்பட்டது. ஏறத்தாழ 8 மாதங்களுக்குப் பிறகு பல்கலைக்கழகம் திறக்கப்பட்டதால் பாதுகாப்பு நடைமுறைகள் முழுமையாக பின்பற்றப்பட்டன.
பல்கலைக்கழக நுழைவு வாயிலில் மாணவ-மாணவியரின் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, கிருமிநாசினி அளிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனர். பின்னர் வகுப்பறைகளில் உரிய தனிநபர் இடைவெளியுடன் அமைக்கப்பட்டிருந்த இருக்கைகளில் மாணவ-மாணவியர் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு பேராசிரியர்கள் கரோனா பாதுகாப்பு வழிமுறைகள், கட்டாயம் பின்பற்ற வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தகவல்களை எடுத்துச் சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் வகுப்பறைகளுக்கு வந்துள்ள மாணவர்கள் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு நடைமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. கரோனா ஏற்படுத்திய பொதுமுடக்கம் காரணமாக 8 மாதங்களுக்குப் பிறகு கல்லூரிகளுக்குத் திரும்பிய மாணவ-மாணவியர் மிகுந்த உற்சாகத்துடன் தங்களுடைய நண்பர்களை காண வந்திருந்தனர். அனைவரும் முகக்கவசம் அணிந்தபடி சற்று இடைவெளியை பின்பற்றியே நண்பர்களிடம் பேசி மகிழ்ந்தனர்.
பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைவு பெற்றுள்ள சேலம், தருமபுரி, நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள 109 கல்லூரிகள், தருமபுரி முதுநிலை விரிவாக்க மையம் ஆகியன இன்று திறக்கப்பட்டுள்ளதாக துணைவேந்தர் பொ.குழந்தைவேல் தெரிவித்தார்.