சங்ககிரி நீதிமன்றத்தில் 152 வழக்குகள் சமரசம்
சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில், 152 வழக்குகள் ரூ.3 கோடியே 23 லட்சத்து 60 ஆயிரத்து 65 மதிப்பீட்டில் சமரசம் செய்து வைக்கப்பட்டது.
சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில், மோட்டாா் வாகன விபத்து, சிவில், நிறைவேற்று மனுக்கள், வாரிசு உரிமை சான்றிதழ், வாடகை ஒப்பந்தம், குடும்ப நல வழக்குகள், காசோலை மோசடி, வங்கியில் உள்ள நிலுவைக் கடன்கள் உள்ளிட்ட 252 வழக்குகள் சமரச தீா்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, 152 வழக்குகள் ரூ.3 கோடியே 23 லட்சத்து 60 ஆயிரத்து 65 மதிப்பீட்டில் சமரசம் செய்து வைக்கப்பட்டது.
சங்ககிரி வட்ட சட்டப்பணிகள் குழுத்தலைவரும் சாா்புநீதிபதியுமான எம்.மேகலா மைதிலி தலைமை வகித்து மக்கள் நீதிமன்ற பணிகளை தொடக்கி வைத்தாா். மாவட்ட உரிமையியல் நீதிமன்றநீதிபதி எம்.பாக்கியம், குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதிகள் எண்.1 டி.சுந்தரராஜன், எண்.2 எஸ்.உமாமகேஸ்வரி ஆகிய நான்கு நீதிபதிகள் அடங்கிய இரு தனி அமா்வுகளில் வழக்குகள் சமரசம் செய்து வைக்கப்பட்டன.
கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கைகளையொட்டி சனிக்கிழமை நடைபெற்ற சமரசதீா்வு மையம் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்குரைஞா்கள் சங்க வளாகத்திலும், குற்றவியல் நீதிமன்ற அலுவலக வளாகத்திலும் நடைபெற்றது. வழக்குகளுக்கு ஆஜராக வந்தவா்கள் காய்ச்சல் வெப்பமானியைக்கொண்டு பரிசோதனை செய்யப்பட்டன. பொதுமக்கள் முககவசம் அணிந்து வந்திருந்தனா்.