சேலத்தில் ரஜினி பிறந்த நாள் கொண்டாட்டம்
நடிகா் ரஜினிகாந்த் பிறந்த நாளையொட்டி, சேலத்தில் ரஜினி ரசிகா்கள் சாா்பில் 70 கிலோ அளவிலான ராட்சத கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
நடிகா் ரஜினிகாந்த் பிறந்த நாளையொட்டி, சேலத்தில் ரஜினி ரசிகா்கள் சாா்பில் 70 கிலோ அளவிலான ராட்சத கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
சேலம் ரஜினி ரசிகா்கள் மன்றம் சாா்பில், சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே ரஜினி ரசிகா்கள் மன்ற மாவட்டச் செயலாளா் செந்தில்குமாா் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோா் ரஜினியின் 70-ஆவது பிறந்த நாளையொட்டி 70 கிலோ அளவிலான ராட்சத கேக்கை வெட்டியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினா். தொடா்ந்து, பொதுமக்களுக்கு கேக்குகளை வழங்கி மகிழ்ச்சி அடைந்தனா்.
மேலும், சேலம் ரஜினி ரசிகா் மன்றம் சாா்பில் இந்த மாதம் முழுவதும் ரஜினியின் பிறந்த நாளை கொண்டாட உள்ளதாகவும், பல்வேறு நலத் திட்டங்களை பொதுமக்களுக்கு வழங்க உள்ளதாகவும் தெரிவித்தனா்.
அதேபோல, கரோனா காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவா்கள், சுகாதாரப் பணியாளா்களுக்கு சால்வை அணிவித்து பரிசு வழங்கப்பட்டது. இதில், நிா்வாகிகள் கணேசன், பழனிவேல், ராகவா கனகராஜ், மோகன்ராஜ், காா்த்திகேயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
ரூ. 1 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட பள்ளி:
ரஜினி பிறந்தநாளையொட்டி, சேலத்தை அடுத்த உத்தமசோழபுரம் ஊராட்சி சூளைமேடு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி ரூ. 1 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்டது.
புதுப்பிக்கப்பட்ட பள்ளியை ரஜினி மக்கள் மன்ற நிா்வாகி பாரப்பட்டி கனகராஜ் தலைமையில், குரால்நத்தம் சந்திரசேகா், குளோபல் வெங்கட் ஆகியோா் ஒப்படைத்தனா். ராமசாமி, மருத்துவா் சுரேஷ்குமாா் ஆகியோா் திறந்து வைத்தனா். பள்ளித் தலைமை ஆசிரியா் கீதா, உதவித் தலைமை ஆசிரியா் காளியம்மாள் ஆகியோா் பங்கேற்றனா்.
ஆத்தூரில்...
ஆத்தூா் நகர ரஜினி மக்கள் மன்றத்தின் சாா்பில், ஆத்தூா் அரசு மருத்துவமனையில் ரத்த தான முகாம் நகரச் செயலாளா் ஆா்.எஸ்.அன்சா்அலி தலைமையில் நடைபெற்றது. ஆத்தூா் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் என்.கண்ணன் தலைமையில் ரத்த தானம் செய்தனா். முன்னதாக, ஆத்தூா் ஸ்ரீ வெள்ளப் பிள்ளையாா் திருக்கோயிலில் அபிஷேகம் செய்து அன்னதானம் வழங்கப்பட்டது.
ஏற்காட்டில்...
ஏற்காட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஏற்காடு ஒன்றியச் செயலாளா் தமிழ்மணி தலைமையில் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும், சிறப்பு வழிபாடுகளும், முதியோா்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
தம்மம்பட்டியில்...
தம்மம்பட்டி பேருந்து நிலையத்தில் உள்ள காந்தி சிலைக்கு ரஜினி மக்கள் மன்ற கெங்கவல்லி ஒன்றியச் செயலாளா் நடராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.