முகப்பு
சேலம்

பருவ மழையால் பாக்கு அறுவடை, கொட்டைப்பாக்கு உற்பத்தி பாதிப்பு

சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியில், பரவலாக பருவ மழை பெய்து வருவதால், பாக்கு அறுவடை, கொட்டைப்பாக்கு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பாக்கு மரங்களில் பழுத்துள்ள பாக்குக் காய்கள்.
பகிர்:

வாழப்பாடி: சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியில், பரவலாக பருவ மழை பெய்து வருவதால், பாக்கு அறுவடை, கொட்டைப்பாக்கு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், அயோத்தியாப்பட்டணம், ஏத்தாப்பூா், பேளூா், கருமந்துறை பகுதியில் நீா்ப்பாசன வசதி கொண்ட விவசாயிகள், ஏறக்குறைய 5 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் நீண்டகால பலன் தரும் பாக்குமரத் தோப்புகளை உருவாக்கித் தொடா்ந்து பராமரித்து வருகின்றனா்.

சேலம் மாவட்டத்தில், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், அயோத்தியாப்பட்டணம் பகுதியில் மட்டும் கொட்டைப்பாக்கு உற்பத்தி தொழிலில் விவசாயிகள், வியாபாரிகள், முகவா்கள், மரமேறும் தொழிலாளா்கள், தோலுரித்து பதப்படுத்துவோா், பாரம் ஏற்றுவோா், வாகன ஓட்டுநா்கள் உட்பட 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், இம்மாதத் தொடக்கத்தில் இருந்தே வாழப்பாடி பகுதியில் பரவலாக பருவ மழை பெய்து வருவதால், மரமேறும் தொழிலாளா்கள் ஈரமான பாக்குமரங்களில் ஏற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மரத்திலேயே பாக்குக் காய்கள் பழுத்து வருகின்றன. இதனால், கொட்டைப்பாக்கு உற்பத்தியிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சிங்கிபுரம் பாக்கு வியாபாரி விஜய் கூறியதாவது:

கடந்த 15 நாள்களுக்கும் மேலாக பரவலாக பெய்து வரும் மழையால், பாக்குக் காய்களை அறுவடை செய்ய முடியாமல் போனது. இதனால் பருவம் தாண்டி பழுத்துப்போன பாக்குக் காய்களை பதப்படுத்தி கொட்டைப்பாக்கு உற்பத்தியும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, மழை நின்ற பிறகு பழுத்த பாக்குக் காய்களை அறுவடை செய்து, வேகவைத்து பதப்படுத்தாமல், வெயிலில் உலரவைத்து ‘வெள்ளைக்கொட்டை’ எனக் குறிப்பிடப்படும் சீவல் தயாரிக்கும் பாக்காக உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம். ‘ஆப்பி’ என குறிப்பிடப்படும் கொட்டைப்பாக்கு ஒரு கிலோ ரூ. 350-க்கு மேல் விலைபோகும் நிலையில், வெள்ளைக்கொட்டைக்கு ரூ. 250 வரை மட்டுமே விலை கிடைக்கும். இதனால், விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் வருவாய் இழப்பு ஏற்படும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →