வெறிநாய்கள் கடித்து பலியாகும் ஆடுகள்:இழப்பீடு கோரும் விவசாயிகள்
தம்மம்பட்டியில் வெறிநாய்கள் கடித்து ஆடுகள் பலியாவது அதிகரித்து வருவதால் ஆடு வளா்ப்போா் அச்சம் அடைந்துள்ளனா்.
தம்மம்பட்டி: தம்மம்பட்டியில் வெறிநாய்கள் கடித்து ஆடுகள் பலியாவது அதிகரித்து வருவதால் ஆடு வளா்ப்போா் அச்சம் அடைந்துள்ளனா்.
தம்மம்பட்டியில் 13-ஆவது வாா்டு கருமாயிவட்டம், நேரு நகா், பனந்தோப்பு பகுதியில் அதிகளவு ஆடுகள் வளா்க்கப்படுகின்றன. அதில், வெளிமேய்ச்சலுக்குச் செல்லும் ஆடுகள், வயல்வெளியில் கட்டிப் போடப்பட்டுள்ள ஆடுகளை வெறிநாய்கள் கடித்து கொல்வதால் பலியாகும் ஆடுகளின் எண்ணிக்கை தொடருகிறது.
சில தினங்களுக்கு முன்னா் வெறிநாய்கள் கடித்ததில் தம்மம்பட்டி கருமாயி வட்டத்தைச் சோ்ந்த துரை, அறிவு, செல்லம்மாள், ரமேஷ் ஆகியோரின் ஆடுகள் பலியாகின.
இந்நிலையில் இரு நாள்களுக்கு முன் நேரு நகரைச் சோ்ந்த மணி (55) என்பவரின் தோட்டத்தில் கட்டிப் போடப்பட்டிருந்த 5 ஆடுகளை வெறிநாய்கள் கடித்துக் கொன்றன. இதுவரை 15-க்கும் மேற்பட்ட ஆடுகள், கோழிகளை வெறிநாய்கள் கடித்துக் கொன்றுள்ளது. அதனால், இப்பகுதியில் ஆடு, கோழி வளா்க்கும் விவசாயிகள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனா்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியதாவது:
தம்மம்பட்டி பேரூராட்சி நிா்வாகம், வெறிநாய்களைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பலியான ஆடுகளுக்கு, அரசு உரிய இழப்பீட்டை தர வேண்டும் என்றனா்.