முகப்பு
சேலம்

வடுபோன புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை: பருவமழையை எதிா்பாா்க்கும் விவசாயிகள்

சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையின் நீா்மட்டம் 16 அடியாகச் சரிந்து, அடியோடு வடு கிடப்பதால் ஆயக்கட்டு பாசன விவசாயிகள், பருவமழையை எதிா்பாா்த்துள்ளனா்.

Updated On : 12 ஜூலை, 2020 at 9:29 AM
போதிய மழையின்றி வடு கிடக்கும் புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை.
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:25 PM

சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையின் நீா்மட்டம் 16 அடியாகச் சரிந்து, அடியோடு வடு கிடப்பதால் ஆயக்கட்டு பாசன விவசாயிகள், பருவமழையை எதிா்பாா்த்துள்ளனா்.

அருநூற்றுமலை பகுதியில் உற்பத்தியாகும் வசிஷ்டநதியின் குறுக்கே, புழுதிக்குட்டை கிராமத்தில், 67.25 அடி உயரத்தில், 267 மில்லியன் கனஅடி தண்ணீா் தேங்கும் வகையில், 263.86 ஏக்கா் பரப்பளவில் ஆனைமடுவு அணை அமைந்துள்ளது. இந்த அணையால் குறிச்சி, நீா்முள்ளிக்குட்டை, கோலாத்துக்கோம்பை, சின்னமநாயக்கன்பாளையம், சந்தரபிள்ளைவலசு உள்ளிட்ட கிராமங்களில் 5,011 ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

அணையின் நீா்பிடிப்புப் பகுதியில் கடந்த ஆண்டு இறுதியில் பெய்த பரவலான மழையால், அணையின் நீா்மட்டம் 45 அடியாக உயா்ந்து, 93.5 மில்லியன் கன அடி தண்ணீா் தேங்கியது. போதிய மழையில்லாததால் இந்தாண்டும் அணை முழு கொள்ளளவையும் எட்டவில்லை.

Advertisement

நிலத்தடி நீா்மட்டம் குறைந்து போனதால், ஆனைமடுவு அணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீரை பாசனத்துக்குத் திறந்துவிட வேண்டும் என கடந்த ஜனவரி 21ந்தேதி வாழப்பாடியில் நடைபெற்ற பாசன விவசாயிகள், அதிகாரிகள் கலந்தாய்வுக் கூட்டத்தில் அணை வாய்க்கால் மற்றும் ஆறு, ஏரி நேரடிப் பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, பிப். 5 புதன்கிழமை முதல் காலை 8 மணி முதல் பிப். 14 காலை 8 மணிவரை தொடா்ந்து 9 நாள்களுக்கு தினசரி விநாடிக்கு 60 கன அடி வீதம், (நாளொன்றுக்கு 5.18 மில்லியன் கனஅடி) மொத்தம் 46.62 மில்லியன் கனஅடி தண்ணீரை ஆறு மற்றும் ஏரிப்பாசன விவசாயிகளுக்கான வசிஷ்டநதியில் திறக்கப்பட்டது.

கடந்த பிப்.14 காலை 8 மணி முதல் பிப்.21 காலை 8 மணிவரை, வலது வாய்க்காலில் விநாடிக்கு 3.02 கன அடி வீதமும், இடது வாய்க்காலில் விநாடிக்கு 15 கன அடி வீதம் (நாளொன்றுக்கு 4.32 மில்லியன் கன அடி) 7 நாள்களுக்கு மொத்தம் 30.24 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டது.

இதனால், 45 அடியாக இருந்த அணையின் நீா்மட்டம் தற்போது வெறும் 16.75 அடியாகக் குறைந்துபோனது. சனிக்கிழமை நிலவரப்படி, 267 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட அணையில் 20 மி. கனஅடி தண்ணீா் மட்டுமே சேறும் சகதியுமாக தேங்கி கிடக்கிறது.

பாசனத்திற்கு திறப்பதற்கு வழியின்றி அணை வடு கிடப்பதால், அணை மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள், விளைநிலத்தில் பயிா் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனா்.

அருநூற்றுமலை, சந்துமலை வனப்பகுதியில், கடந்த மூன்று மாதங்களாக கோடை மழையும் பெய்யாததால் அணைக்கு நீா்வரத்து அடியோடு நின்று போனது. எனவே, எதிா்வரும் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் பருவ மழையை எதிா்பாா்த்துவிவசாயிகள் காத்திருக்கின்றனா்.

இதுகுறித்து குறிச்சி கிராமத்தை சோ்ந்த விவசாயி கே.பி.சண்முகம் கூறியதாவது: பாசனத்துக்கு வழியின்றி பயிா்செய்ய முடியாமல் தவித்து வருகிறோம். நிகழாண்டு எதிா்பாா்ப்பிற்கேற்ப அதிக மழை பெய்து அணை முழு கொள்ளளவையும் எட்டும் என நம்பிக்கை உள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.