மும்பையிலிருந்து பெத்தநாயக்கன்பாளையம் வந்த மூவருக்கு கரோனா
மும்பையில் இருந்து சேலம் திரும்பிய 3 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பையில் இருந்து, பெத்தநாயக்கன்பாளையத்திற்கு மாமியாரை பார்க்க வந்த மருமகள் உள்பட மூவருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்ததால், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் தண்ணீர்பந்தல் பகுதியை சேர்ந்தவர் மூதாட்டி அமராவதி(75). நோய்பட்டிருந்த இவரது உடல்நிலை மோசமானது குறித்து, மகாராஷ்டிர மாநிலம் மும்பையிலுள்ள இவரது உறவினர்களுக்கு, அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, மூதாட்டியின் மருமகள், மருமகன், பேரன், பேத்தி உள்ளிட்ட 5 பேர் மும்பையில் இருந்து வாடகை காரில் பெத்தநாயக்கன்பாளையம் நோக்கி வந்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை நன்பகல் 2 மணியளவில், ஓமலுார் சுங்கச்சாவடிக்கு கார் வந்தபோது, காரில் இருந்த 5 பேருக்கும் சுகாதாரத் துறையினர் கரோனா பரிசோதனைக்காக சளி மாதிரி எடுத்துள்ளனர்.
உடல்நிலை சரியில்லாத மூதாட்டியை பார்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டதால், 5 பேரையும் அதே காரில் பெத்தநாயக்கன்பாளையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில், திங்கட்கிழமை காலை வெளியான சளி பரிசோதனை முடிவில், மருமகள், மருமகன், பேரன் ஆகிய மூவருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து, பெத்தநாயக்கன்பாளையத்தில் இருந்த மூவரையும் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்களோடு காரில் வந்த இரு பெண்களையும் தனிமைப்படுத்தி வைத்துள்ளனர். நோய்வாய்ப்பட்டிருந்த மூதாட்டி அமராவதியையும் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மும்பையில் இருந்து இவர்கள் பயணித்த வாடகை காரை ஓட்டிவந்தவரை செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்ட சுகாதாரத் துறையினர், அவரையும் கரோனா பரிசோதனை செய்து கொள்ளவும், தனிமைப்படுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர்.
பெத்தநாயக்கன்பாளையம் தண்ணீர் பந்தல் பகுதியில் கரோனா பரவல் தடுப்புப் பணிகளை வட்டாட்சியர் வெங்கடேசன் தலைமையிலான வருவாய்த் துறையினர் மற்றும் சுகாதாரத்துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.