சோமம்பட்டி ஏரியை சீரமைத்து 1,000 மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடக்கம்
வாழப்பாடி அருகே புதர்மண்டி கிடக்கும் சோமம்பட்டி ஏரியை துார்வாரி சீரமைத்து மழைநீரை சேமிக்கவும், 1000 மரக்கன்றுகள் நட்டு ஊர்ப்புற வனம் உருவாக்கும் திட்டமும், ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.
வாழப்பாடி அருகே புதர்மண்டி கிடக்கும் சோமம்பட்டி ஏரியை துார்வாரி சீரமைத்து மழைநீரை சேமிக்கவும், 1000 மரக்கன்றுகள் நட்டு ஊர்ப்புற வனம் உருவாக்கும் திட்டமும், ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த சோமம்பட்டி கிராமத்தில் 2015 ம் ஆண்டு, ஊராட்சி செயலர் கே.மகேஸ்வரன் முயற்சியால், குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவுநீரை வடிகட்டிப் பயன்படுத்தி, ஏரிக்கரை பெருமாள் கோவில் பகுதியில் தேக்கு மரக்கன்றுகள் நடப்பட்டது. கிராம மக்களின் பங்களிப்பு மற்றும் பராமரிப்பால் இப்பகுதி தற்போது தேக்கு மரத்தோட்டமாக உருவாகியுள்ளது.
இதனைத்தொடர்ந்து, சீமைகருவேலம் முட்புதர் மண்டிக்கிடக்கும் 85 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியை துார்வாரி சீரமைத்து, மழை நீரை சேமித்து வைப்பதற்கான பணிகளையும், மரக்கன்றுகளை நட்டு ஏரியை ஊர்ப்புற வனமாக மாற்றுவதற்கும், கிராம மக்கள், தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து, சோமம்பட்டி ஏரி வளர்ச்சிக்குழு ஏற்படுத்தியுள்ளனர். இக்குழு வாயிலாக, ஏரியை படிப்படியாக துார்வாரி சீரமைக்கும் பணிகளும், மரத்தோட்டம் அமைக்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதுவரை 10 ஏக்கரில் மரத்தோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. சோமம்பட்டி ஏரி வளர்ச்சிக்குழுவுடன், வாழப்பாடி அரிமா சங்கம், நெஸ்ட் அறக்கட்டளையும் இணைந்து, சோமம்பட்டி ஏரியில் மழைநீரை தேக்கி வைப்பதற்கு, விநாயகர் கோவில் பின்புறம் ஏறக்குறைய 5 ஏக்கர் பரப்பளவில் புதர்மண்டிக்கிடந்த சீமைகருவேலம் முட்புதர்களை அப்புறப்படுத்தல் மற்றும் நீரில் வாழும் தகவமைப்பு கொண்ட 1000 வெள்ளைவேல் மரக்கன்றுகள் நட்டு ஊர்ப்புற வனத்தை உருவாக்கும் திட்டப்பணிகளும், ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.
சோமம்பட்டி ஊராட்சிமன்ற தலைவர் எஸ்.ஏ.பாலசுப்பிரமணியன் தலைமையில், வாழப்பாடி அரிமா சங்க பட்டயத்தலைவர் சந்திரசேகரன், ஏரியை சீரமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். சோமம்பட்டி ஊராட்சி துணைத்தலைவர் கதிரேன், ஊராட்சி செயலர் கே.மகேஸ்வரன், வாழப்பாடி அரிமா சங்கத் தலைவர் சா.ஜவஹர், செயலாளர்கள் பெரியார்மன்னன், சி.பொன்னம்பலம், சேவைத்திட்ட தலைவர் பிரபாகரன், பொருளாளர் பன்னீர்செல்வன், சோமம்பட்டி ஏரி வளர்ச்சிக்குழு சிவா ஆகியோர் பங்கேற்றனர்.