ஆங்கிலேயர் ஆட்சியில் மக்களின் தாகம் தீர்க்க விவசாயி ஒருவர் அமைத்த நடைகிணறு 83 ஆண்டுகள் கடந்தும் மனித நேயத்தை சித்திரிக்கும் வரலாற்று சின்னமாக இப்போதும் திகழ்கிறது. 
சேலம்

ஆங்கிலேயர் ஆட்சியில் மக்களின் தாகம் தீர்க்க விவசாயி அமைத்த நடைகிணறு!

ஆங்கிலேயர் ஆட்சியில் மக்களின் தாகம் தீர்க்க விவசாயி ஒருவர் அமைத்த நடைகிணறு 83 ஆண்டுகள் கடந்தும் மனித நேயத்தை சித்திரிக்கும் வரலாற்று சின்னமாக இப்போதும் திகழ்கிறது.

பெரியார் மன்னன்

வாழப்பாடி: ஆங்கிலேயர் ஆட்சியில் மக்களின் தாகம் தீர்க்க விவசாயி ஒருவர் அமைத்த நடைகிணறு 83 ஆண்டுகள் கடந்தும் மனித நேயத்தை சித்திரிக்கும் வரலாற்று சின்னமாக இப்போதும் திகழ்கிறது:

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சோமம்பட்டி கிராமத்தில், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் விவசாயி ஒருவர் கிராம மக்களின் தாகம் தீர்க்க 100 அடி ஆழத்தில், 50 படிக்கட்டுகளுடன் நடைகிணறு அமைத்துள்ளார். இந்த கிணற்றை 83 ஆண்டுகள் கடந்தும் இவரது சந்ததியர், பராமரித்து பாதுகாத்து வருவதால், மனித நேயத்தை சித்தரிக்கும் வரலாற்று சின்னமாக இன்றளவும் திகழ்ந்து வருகிறது.

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் வரை, பெரும்பாலான கிராமப்புற மக்கள், குடிநீர் மற்றும் நீர்பாசன தேவைகளுக்கு திறந்தவெளி கிணறுகளையே பயன்படுத்தி வந்தனர். மாடுகளை ஏற்றம் கட்டி கவலை இறைத்தும், கயிற்றில் வாளியை கட்டி மொண்டும் கிணற்றுக்குள் இருக்கும் தண்ணீரை மேலே எடுத்தனர். ஆழ்துளை கிணறுகளும், நீர் இறைக்கும் நவீன மோட்டார் இயந்திரங்களும் பயன்பாட்டிற்கு வந்த பிறகே திறந்தவெளி கிணறுகளின் பயன்பாடு படிப்படியாக குறைந்து போனது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் வசதியாக வாழ்ந்த விவசாயிகள், செல்வந்தர்கள், நிலச்சுவாந்தார்கள் ஏராளமானோர், மக்கள் நலன் கருதி தங்களது சொந்த நிலத்தில் கிணறுகளை தோண்டி வைத்தனர். கிணற்றுக்குள் பெண்கள், முதியவர்கள், வழிப்போக்கர்கள் எளிதாக நடந்து சென்று, யாரொருவர் உதவியுமின்றி தண்ணீரை எடுத்து பயன்படுத்திக் கொள்வதற்கு வசதியாக பாதாள படிக்கட்டுக்களையும் அமைத்தனர். மக்களின் தாகம் தீர்க்க மனித நேயமிக்கோர் படிக்கட்டுகளுடன் அமைத்த இவ்வகை கிணறுகள்,  ‘நடைகிணறுகள்’ என அழைக்கப்பட்டன.

வாழப்பாடி பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்வரை பல்வேறு கிராமங்களில் காணப்பட்ட இந்த நடைகிணறுகள், நவீன முறை ஆழ்துளை கிணறுகள், மின் மோட்டார்கள், மேல்நிலை குடிநீர் தொட்டிகள், வீடுகளுக்கே குடிநீர் குழாய் இணைப்பு முறைகள் பயன்பாட்டிற்கு வந்ததால், நாளடைவில் இருந்த சுவடே தெரியாத அளவிற்கு அழிந்து போயின.

வாழப்பாடி அருகே சோமம்பட்டி கிராமத்தில், 100 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வாழ்ந்த நாராயணஉடையார் என்பவர் நிலச்சுவாந்தராக இருந்துள்ளார். விலாரிபாளையம் சாலையோரத்திலுள்ள இவரது தோட்டத்தில், வற்றாத தண்ணீர் வளம் கொண்ட கிணறு இருந்தது. 85 ஆண்டுகளுக்கு முன் கடும் வறட்சி நிலவியதால், குடிநீருக்கு வழியின்றி கிராம மக்கள் அவதிக்குள்ளாகினர்.

இதனால், மக்களின் தாகம் தீர்க்க தனது விவசாய கிணற்றில் இருந்து தண்ணீர் வழங்கிட இவர்  தானாக முன் வந்தார். இதற்காக ஏறக்குறைய 100 அடி ஆழமுள்ள தனது கிணற்றில், பெண்கள், முதியோர்கள், வழிப்போக்கர்கள் சிரமமின்றி எளிதாக இறங்கி, பாதுகாப்பாக தண்ணீர் எடுத்து செல்வதற்கு வசதியாக, 50 அடி துாரத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட படிக்கட்டுகளும், இருபுறமும் தடுப்புச்சுவர்களும் அமைத்து, கடந்த 1937ம் ஆண்டு ஜூலை மாதம் 21ம் தேதி நடைகிணறாக மாற்றி மக்களுக்கான அற்பணித்தார்.

இவரைத் தொடர்ந்து, 50 ஆண்டுகள் வரை இவரது மகன் ராஜா, பேரன் ஜெயராமன் ஆகியோரும் இந்த கிணற்று நீரை கிராம மக்கள் குடிநீர் தேவைக்கு பயன்டுத்திக் கொள்ள அனுமதியளித்து வந்தனர். காலப்போக்கில் கிராமம் வளர்ச்சி பெற்றதும், ஏராளமான கிணறுகளும், ஆழ்துளை கிணறுகளும் அமைக்கப்பட்டதால், இந்த நடைகிணறு தற்போது பயன்பாட்டில் இல்லை. இந்த கிணற்றில் மின் மோட்டார் வைத்து விவசாய பயன்பாட்டிற்கு தண்ணீர் இறைத்து வருகின்றனர்.

இருப்பீனும், கிராம மக்கள் தாகம் தீர்க்க தானாக முன்வந்து நடைகிணறு அமைத்த தனது முப்பாட்டனாரை போற்றும் வகையில், நாராயண உடையாரின் தற்கால சந்ததியரான பேரன் ஜெயராமன் மனைவி ராணி, கொள்ளுப்பேரன்கள் வெங்கடேஷ், அசோக்குமார் ஆகியோரது குடும்பத்தினர், இந்த நடைகிணறை புதுப்பித்து, தொடர்ந்து பராமரித்து பாதுகாத்து வருகின்றனர். இந்த நடைகிணறு சோமம்பட்டி கிராமத்தில் மனித நேயத்தை சித்தரிக்கும் வரலாற்று சின்னமாக இன்றளவும் கம்பீரமாக காட்சியளித்து வருகிறது.

‘நாராயண உடையாரின் நான்காம் தலைமுறை சந்ததியர், பல ஆண்டுகளுக்கு முன்பே சென்னைக்கு சென்று நகர வாழ்க்கை முறைக்கு மாறிவிட்ட நிலையிலும், பூர்வீக கிராமத்திலுள்ள தனது முப்பாட்டனார் அமைத்த, மனித நேயத்தை பறைச்சாற்றும் நினைவு சின்னமாக திகழும், நடை கிணற்றை ஆயிரக்கணக்கில் செலவளித்து புதுப்பித்து, பராமரித்து பாதுகாத்து வருவது பாராட்டுக்குரியதாகுமென, சோமம்பட்டி ஊராட்சி செயலர் கே.மகேஸ்வரன்   தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT