சேலம் மாவட்டம், கொளத்துார் அருகே பாலமலையிலுள்ள 33 கிராம மக்கள், சாலை போக்குவரத்து, மருத்துவம், வேலைவாய்ப்பு, செல்லிடப்பேசி இணைய இணைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி பரிதவித்து வருகின்றனர். கற்கால வாழ்க்கை நடத்தி வரும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, மலைப்பாதையை தார்சாலையாக தரம் உயர்த்திடவும், அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் கடல் மட்டத்தில் இருந்து 3900 அடி உயரத்தில், மேட்டூர் வட்டம் கொளத்துார் ஊராட்சி ஒன்றியத்தில் பாலமலை அமைந்துள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான மேற்குத்தொடர்ச்சி மலையில், ஏறக்குறைய 14.75 கி.மீ பரப்பளவில் அமைந்துள்ள பாலமலை, 1956ம் ஆண்டு நவம்பர் 18 ந்தேதி தனி ஊராட்சியாக உருவாக்கப்பட்டது. இந்த ஊராட்சியில் மொத்தம் 33 குக்கிராமங்கள் அமைந்துள்ளன. பாலமலையிலுள்ள 33 கிராமங்களிலும், ஆண்கள், பெண்கள் குழந்தைகள் உட்பட ஏறக்குறைய 5,000 பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டுள்ள இந்த மலை கிராம மக்கள், பாரம்பரிய இயற்கை அங்கக முறையில் வரகு, கேழ்வரகு, தினை, சாமை ஆகிய சிறுதானியங்களை பயிரிட்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் இதுவரை ஒரு ஆழ்துளை கிணறுகள் கூட அமைக்கப்படாதஊராட்சி பாலமலை என்பதும், இதுவரை இப்பகுதி மக்கள் திறந்தவெளி கிணறுகளையை குடிநீர் மற்றும் பாசனத்திற்கு பயன்படுத்தி வருவதும் குறிப்பிடதக்கதாகும். மலைச்சரிவான நிலப்பகுதியில் கொய்யா, பலா, சீத்தா, நாவல், மாம்பழம் ஆகியவற்றையும் சாகுபடி செய்து வருகின்றனர். அரிதாகிவரும் நாட்டுரக பசுக்கள், காளைகள், ஆடுகள் உள்ளிட்ட கால்நடை வளர்ப்பை உபதொழிலாக கொண்டுள்ளனர். அதிநவீன அறிவியல் முன்னேற்றம் கண்டுவிட்ட இக்காலத்திலும், பாலமலை கிராமங்களை சேர்ந்த பழங்குடியின மக்கள் இன்றளவும் எளிய முறையில் வாழ்ந்து வருகின்றனர். சாலை வசதியின்றி கரடுமுரடான ஒற்றையடி பாதையில் பயணித்து வந்த இந்த மலை கிராமங்களை சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து, தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை பயன்படுத்தி, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன், தங்களது மலை கிராமங்களுக்கு தாங்களே மலைப்பாதை அமைத்துக் கொண்டனர்.
இன்றளவிலும் இந்த மலைப்பாதையிலேயே உயிரை பணயம் வைத்து பிக்கப், டிரக்ஸ், போர்ஸ் ஆகிய சரக்கு வாகனங்களில் தினந்தோறும் அபாய நிலையில் பயணித்து வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் அதிக குக்கிராமங்களை கொண்ட பாலமலை ஊராட்சியில், கெம்மம்பட்டி, கடுக்காமரத்துகாடு, நமன்காடு, பாத்திரமடுவு, பெரியிலைக்காடு, புள்ளாம்பட்டி, ராமன்பட்டி, தலைக்காடு, உரல்மரத்துார், செட்டிக்காடு, கொட்டக்காடு ஆகிய 20 குக்கிராமங்களுக்கு, சேலம் மாவட்ட எல்லையான கண்ணாமூச்சி வழியாக மக்களே அமைத்துள்ள மலைப்பாதையில் தான் செல்ல வேண்டும். இதே ஊராட்சிக்கு உட்பட்ட தொங்கனாங்பாலி, துரவன்காடு, குங்கிலியன்காடு, நகாம்பொதி, பெரியகுளம், ஈச்சங்காடு, நத்தக்காடு, திம்மம்பொதி, அணைகாடு, கொல்லுபாலிகாடு, கடுக்காப்பட்டி, கொல்லுக்காடு, காரப்பாலிக்காடு ஆகிய கிராமங்களுக்கு, கண்ணாமூச்சி மலைப்பாதை வழியாக செல்ல முடியாது. ஈரோடு மாவட்டம், குருவரெட்டியூர் மலைப்பாதை வழியாகத்தான் செல்ல முடியும். ஒரே ஊராட்சிக்கு உட்பட்ட மலை கிராமங்களை சேர்ந்த மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கவும், விவசாய விளைபொருட்களை விற்பனை செய்யவும், ஏறக்குறைய 20 கி.மீ., துாரத்திலுள்ள இரு வேறு மலைப்பாதைகள் வழியாக வெவ்வேறு மாவட்டங்களுக்கு பயணிக்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளனர்.
பாலமலையில், 5 தொடக்கப்பள்ளிகள், 1 நடுநிலைப்பள்ளி மற்றும் 1 உயர்நிலைப்பள்ளிகளென மொத்தம் 7 அரசுப்பள்ளிகள் அமைந்துள்ளன. இப்பள்ளிகளில் ஏறக்குறைய 500க்கும் மேற்பட்ட மாணவ–மாணவியர் படித்து வருகின்றனர். எளிதாக பயணிப்பதற்கேற்ற தார்சாலை வசதியில்லாததால் இப்பள்ளிகளுக்கு நியமிக்கப்படும் ஆசிரியர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வந்து செல்ல முடிவதில்லை. இதனால், பாலமலை கிராமங்களிலுள்ள மாணவ–மாணவியரின் கல்வித்தரம் கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. இருப்பீனும், முனைப்போடு படித்து பள்ளிக்கல்வியை முடித்துள்ள ஏராளமான இளைஞர்களும், இளம்பெண்களும், பிழைப்பிற்காகவும், வேலைவாய்ப்பிற்காகவும், திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம், மேட்டூர் பகுதிக்கு சென்று தங்கி பனியன் தொழிற்சாலைகள், சாயப்பட்டறைகள், ஹோட்டல்களிலும், ஓட்டுநர்களாகவும் பணிபுரிந்து வருகின்றனர். போதிய மருத்துவ வசதியில்லாததால் நோய்வாய்ப்படும் முதியோர்கள் மற்றும் கர்ப்பிணிப்பெண்களை, சரக்கு வாகனங்களை எதிர்பார்க்காமல் தொட்டில் கட்டி துாக்கிக் கொண்டு கரடுமுரடான மலைப்பாதை வழியாக மலையடிவாரம் வரை கொண்டு சென்று, அங்கிருந்து 20 கி.மீ., துாரத்திலுள்ள மேட்டூர், கொளத்துார் அல்லது குருவரெட்டியூருக்கு அழைத்துச் செல்ல வேண்டிய அவலமும் இன்றளவும் நீடித்து வருகிறது.
இப்பகுதி மக்களின் நீண்டகால போராட்டத்திற்கு பிறகு, மத்திய அரசின் சிறப்பு திட்டத்தின் கீழ் கடந்த சில ஆண்டுகளில் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதி மக்களின் விடிவுக்கு அச்சாரமிடும் வகையில் அமைந்தது. சேலம் மாவட்டம் கண்ணாமூச்சியில் இருந்தும், ஈரோடு மாவட்டம் குருவரெட்டியூரில் இருந்தும் ஏறக்குறயை 7 கி.மீ., துாரத்திற்கு, வனப்பகுதியையொட்டி மக்கள் அமைத்துள்ள மலைப்பாதையை சீரமைத்து, கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய தார்சாலை அமைத்து, பாலமலையிலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் சாலை போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். மாவட்டஆட்சியர் முதல் மத்திய அமைச்சர்கள் வரை மனுப்போர் நடத்தியும், மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி வழியே தார்சாலை அமைப்பதற்கு இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. இதனால், வாழ்வாதாரத்தை இழந்து பாலமலை கிராம மக்கள் தவித்து வருகின்றனர். எனவே, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் மத்திய, மாநில அரசுகளிடம் பாலமலை கிராம மக்களின் அவலங்களை எடுத்துரைத்து, மத்திய வனத்துறையிடம் இருந்து அனுமதிப் பெற்று, கண்ணாமூச்சி மற்றும் குருவரெட்டியூர் ஆகிய இரு மலைப்பாதைகளையும் தார்சாலையாக மாற்றியமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து பாலமலை ஊராட்சிமன்ற தலைவர் தேவராஜ் (35) கூறியதாவது:
எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையிலும், பாலமலையை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட இளைஞர்களும், இளம்பெண்களும், பெரும் சிரமத்திற்கிடையே பட்டப்படிப்பு முடித்துள்ளனர். ஆனால், தினந்தோறும் பணிக்கு சென்று வருவதற்கு சாலை போக்குவரத்து வசதிகள் இல்லாததால் கிராமத்திலேயே முடங்கி கிடக்கின்றனர். மழைக்காலங்களில் வெள்ளம் வழிந்தோடி வரும் போது, மக்கள் அமைத்துள்ளம மலைப்பாதை அரித்து விடுகிறது. மீண்டும் கிராம மக்கள் ஒன்றிணைந்து மண் கொட்டி சீரமைத்து பாதையை பயன்படுத்தி வருகிறோம். அடிக்கடி மலைப்பாதையை சீரமைக்க முடியாமல் அவதிக்குள்ளாகி வருகிறோம். எனவே, பாலமலை கிராமங்களுக்கு கண்ணாமூச்சி மற்றும் குருவரெட்டியூர் ஆகிய இரு வழிகளிலும் மலைப்பாதைகளை சீரமைத்து தார்சாலையாக தரம் உயர்த்த வேண்டும். அனைத்து கிராமங்களுக்கும் மினிபஸ் சிற்றுந்துகளை இயக்கி, நகர்ப்புற மக்களோடு இணைப்பை ஏற்படுத்தி வாழ்வாதாரத்தை மேம்படுத்திட மத்திய மாநில அரசுகள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்’ என்றார்.
இணைய வசதி இல்லாததால் மாணவர்கள் தவிப்பு: பாலமலை கிராமங்களில் செல்லிடப்பேசிகளை பயன்படுத்துவதற்கு முறையாக இணைப்பு கிடைப்பதில்லை. சிக்னல் கிடைக்கும் உயரமான இடங்களை தேடிச்சென்று தகவல் பரிமாற்றம் செய்து வருகின்றனர். இதனால் மலை கிராமத்தில் முடங்கியுள்ள பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ–மாணவியர் இணையவழி வகுப்புகளை படிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே, பாலமலை கிராம மக்களுக்கு செல்லிடப்பேசி மற்றும் இணைய வசதிகள் தடையின்றி கிடைப்பதற்கு உயர்கோபுரங்கள்அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூடுதல் நிதி ஒதுக்கீடு இல்லை: போதிய சாலை போக்குவரத்து வசதியில்லாத மலை கிராமங்களில், பள்ளிகள், விடுதி, அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட கட்டங்கள், பாலங்கள், தடுப்புச்சுவர்கள் உள்ளிட கட்டுமானப்பணிகளை மேற்கொள்வதற்கு, திட்ட மதிப்பீட்டு தொகையை விட 25 சதவீதம் வரை கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்வது மரபாக தொடர்ந்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் ஏற்காடு, அருநுாற்றுமலை, ஜருகுமலை, ஜம்பூத்து மலை உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு இவ்வாறு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. ஆனால், பாலமலையில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப்பணிகளுக்கு மலை கிராமங்களுக்கான கூடுதல் நிதி வழங்கப்படாததால் தரமான கட்டுமானப் பணிகளை எதிர்பார்க்க முடிவதில்லை. எனவே, பாலமலை கிராம அரசு கட்டுமானப் பணிகளுக்கும் கூடுதல் நிதி ஒதுக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் வழிவகை செய்ய வேண்டும்.
குறைந்து போன மக்கள் தொகை: பாலமலையிலுள்ள கிராமங்களில் 2001 மக்கள் தொகை கணக்குப்படி 2062 ஆண்கள், 1847 பெண்கள் உட்பட மொத்தம் 3909 பேர் வாழ்ந்து வந்தனர். இந்த மலை கிராமங்களில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாததால் அவதிக்குள்ளான இந்த மலை கிராமங்களை சேர்ந்த மக்கள், இந்த மலை கிராமங்களில் இருந்து வெளியேறி, திருப்பூர், ஈரோடு, மேட்டூர், கொளத்துார், சேலம் உள்ளிட்ட பகுதியில் தங்கி கூலி வேலை செய்து பிழைக்க தொடங்கினர். இதனால், 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது இந்த மலை கிராமங்களில் 1525 ஆண்கள், 1370 பெண்கள் என மொத்தம் 2895 பேர் மட்டுமே இருந்தனர். பத்து ஆண்டுகளில் ஏறக்குறைய நான்கில் ஒரு பங்கு மக்கள் வெளியேறி விட்டனர். இதற்கிடையே, கடந்த 2011க்கு பிறகு மின்சார வசதி ஏற்படுத்தப்பட்டதோடு, ஒத்தையடிபாதையை, மக்களே ஒன்றிணைந்து மலைப்பாதையாக மாற்றியமைத்துக் கொண்டதால், விவசாய விளைபொருட்களை கொண்டு செல்லவும், அத்தியாவசியப் பொருட்களை வாங்கி வருவதற்கும் வழிவகை கிடைத்து. இதனால் கடந்த சில ஆண்டுகளில் பாலமலை கிராமங்களில் மக்கள் தொகை உயர்ந்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன் 2001ல் இருந்த அளவிற்கு தற்போது மக்கள் தொகை உயர்ந்துள்ளது குறிப்பிடதக்கதாகும்.
ரேஷன் பொருட்கள் வாங்க நெடுந்துார பயணம்: பாலமலையிலுள்ள குக்கிராமங்களில் வசித்து வரும் 1500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கான பொது வினியோக அங்காடி, பாலமலை அடிவாரத்தில் கண்ணாமூச்சதி கிராமத்தில் உள்ளது. பாலமலையிலுள்ள புள்ளாம்பட்டி கிராமத்தில் பகுதி நேர அங்காடி ஒன்று திறக்கப்பட்டுள்ளது. வாரத்திற்கு ஒரு நாள் மட்டுமே இந்த அங்காடியை திறந்து, பொருட்கள் வினியோகிக்கப்படுகிறது. மற்ற நாட்டகளில் 7 கி.மீ., துாரத்திலுள்ள கண்ணாமூச்சி கிராமத்திற்கு சென்று தான் அரசு வழங்கும் அரிசி, பருப்பு, உள்ளிட்ட மானிய விலை பொருட்களை வாங்கி மலைப்பாதையில் சுமந்து செல்ல வேண்டிய அவலம் நீடித்து வருகிறது. எனவே, பாலமலையில் முழுநேர அங்காடி திறக்க வேண்டும். பொருட்களை சரக்கு வாகனங்களில் கொண்டு சென்று அனைத்து கிராம மக்களுக்கும் வழங்குவதற்கு நடமாடும் அங்காடி வசதியையும் மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமெனவும் இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஊராட்சியை இரண்டாக பிரிக்கலாம்: பாலமலையில் மொத்தம் உள்ள 33 குக்கிராமங்களில் 20 கிராமங்கள், சேலம் மாவட்டம் கண்ணாமூச்சி மலைப்பாதை வழியாக அமைந்துள்ளன. மற்ற 13 மலை கிராமங்கள் ஈரோடு மாவட்டம் குருவரெட்டியூர் மலைப்பாதை பகுதியில் அமைந்துள்ளன. இரு பகுதி கிராமங்களுக்கும் ஏறக்குறைய 7 கிலோமீட்டர் தூரத்திற்கு இடைவெளி காணப்படுகிறது. பாலமலை ஊராட்சியை இரண்டாக பிரித்தால், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பெறுவதற்கு வசதியாக இருக்கும்.
இல்லையெனில், இருவேறு பகுதிகளில் அமைந்துள்ள பாலமலை ஊராட்சிக் உட்பட்ட அனைத்து கிராமங்களையும் இணைப்பதற்கு, போதிய இணைப்பு சாலை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.