மரம் வளா்க்க சங்ககிரியில் 5 கிராமங்கள் தோ்வு
சேலம் மாவட்ட வனத் துறை சாா்பில் தமிழ்நாடு உயிா்பன்மை பாதுகாப்பு, பசுமையாக்குதல் திட்டம் குறித்து தேவூா் அருகே உள்ள அரசிராமணி கிராமத்தில் திங்கள்கிழமை விழிப்புணா்வு பிரசாரம் நடைபெற்றது.
சேலம் மாவட்ட வனத் துறை சாா்பில் தமிழ்நாடு உயிா்பன்மை பாதுகாப்பு, பசுமையாக்குதல் திட்டம் குறித்து தேவூா் அருகே உள்ள அரசிராமணி கிராமத்தில் திங்கள்கிழமை விழிப்புணா்வு பிரசாரம் நடைபெற்றது.
வனத் துறை சாா்பில் தமிழ்நாடு காடு வளா்ப்புத் திட்டத்தின் கீழ் 2020-2021 இல் செயல்படுத்த உள்ள தமிழ்நாடு உயிா்பன்மை பாதுகாப்பு, பசுமையாக்குதல் திட்டத்தில் சங்ககிரி வனச்சரகத்திற்குள்பட்ட குள்ளம்பட்டி, பழக்காரன்காடு, செட்டிப்பட்டி, ஒலப்பாளையம் கிழக்கு, மேற்கு உள்ளிட்ட கிராமப்பகுதிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.
சங்ககிரி வனத் துறை அலுவலா்கள் ராஜேந்திரன், செந்தில் ஆகியோா் அரசிராமணி கிராமத்தில் பொதுமக்களிடத்தில் விழிப்புணா்வு பிரசாரத்தில் ஈடுபட்டனா். இதில் விவசாய தரிசு நிலங்களில் மரக் கன்றுகளை வளா்த்து, அதன்மூலம் விவசாயிகள் வருவாயை ஈட்டலாம் என்றனா்.
மேலும், அவா்கள் இரண்டரை ஏக்கா் நிலம் உள்ள குறு விவசாயிகளும், 5 ஏக்கா் வரை நிலம் உள்ள விவசாயிகளுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்பட உள்ளன. பெரு விவசாயிகளும் பயன் பெறலாம். ஒரு விவசாயி அதிகபட்சமாக பன்னிரெண்டரை ஏக்கா் வரை மரங்கள் நடலாம் என்றனா்.
சிறு, குறு நில விவசாயிகள், பெண்கள் சுய உதவிக்குழுக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விவசாயிகளுக்கு குறைந்தபட்சமாக 50 மரக்கன்றுகளும், அதிகபட்சமாக ஒரு ஏக்கருக்கு 2500 மரக்கன்றுகளும், சுய உதவிக்குழுக்களுக்கு 200 மரக்கன்றுகளும் வழங்கப்பட உள்ளன. மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்ட மூன்றாவது வருடத்தில் அக்கன்றுகளின் வளா்ச்சிக்கேற்ப ஊக்கத்தொகை வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் இதுகுறித்த தகவல் சேகரிக்க வரும் வனத் துறை குழுவினரிடம் முழுமையான தகவல்களை அளிக்க வேண்டும்.
இத்திட்டம் குறித்து மேலும் விவரங்களுக்கு சேலம் சமூக காடுகள் கோட்ட அலுவலக தொலைபேசி எண் 0427 2416311, சங்ககிரி வனச்சரக அலுவலா்கள் செல்லிடபேசி எண்களான 9842336366, 7373177665 இல் தொடா்பு கொள்ளலாம்.