'அரசு விதிமுறைகளுக்குள்பட்டு லாரியில் ஜவுளி பாரங்களை ஏற்ற வேண்டும்'
அரசு விதிமுறைகளுக்குள்பட்டு ஜவுளி பாரங்களை உற்பத்தியாளர்கள் ஏற்ற வேண்டும் என சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் கலந்தாய்வுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அரசு விதிமுறைகளுக்குள்பட்டு ஜவுளி பாரங்களை உற்பத்தியாளர்கள் ஏற்ற வேண்டும் என சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் கலந்தாய்வுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் ஜவுளி பாரம் ஏற்றும் முகவர்கள் சங்கத்தின் கலந்தாய்வுக் கூட்டம் சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்க வெள்ளிவிழா கட்டட வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் வி.செல்வராஜ் இக்கூட்டத்திற்கு தலைமை வகித்து பேசியது: லாரி உரிமையாளர்கள் தற்போது ஜவுளி பாரங்கள் ஏற்றுவதால் உரிய வாடைகை கிடைக்காமல் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். ஜவுளி பாரங்கள் ஏற்றும் அனைத்து லாரி உரிமையாளர்கள் நலனைக் கருத்தில் கொண்டு ஜவுளி பாரங்கள் ஏற்றுபவர்கள் அரசு நிர்ணயத்துள்ள 3.8 மீட்டர் உயரமும், 2.6 மீட்டர் அகலமும், 12 மீட்டர் நீளமும் உள்ள ஐவுளி பாரங்களை ஏற்ற வேண்டும். அதற்கு மேல் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பாரங்களை ஏற்றினால் விதிக்கப்படும் அபராதத் தொகையை சரக்கு அனுப்பியவர்தான் செலுத்த வேண்டும், வாகனங்களுக்கு ஏற்று, இறக்கு கூலிகள் இல்லாமல் வண்டியில் உள்ள எடைக்கு வாடைகை கொடுக்க வேண்டும், பாரம் ஏற்றவும், இறக்கவும் வாகனம் இடத்திற்கு வந்தவுடன் 24 மணி நேரத்திற்குள் லாரியை அனுப்ப வேண்டும்.
அதற்குமேல் காலதாமதம் ஏற்படும் போது காத்திருப்பதற்கு வாடைகை கொடுக்க வேண்டும், உள்ளூர் பராம் ஏற்றுவதற்கும், இறக்குவதற்கும் வண்டியை அனுப்பக் கூடாது, தவிர்க்க முடியாமல் வாகனங்களை அனுப்பும் பட்சத்தில் அதற்கு கிலோ மீட்டர் அடிப்படையில் வாடைகை வழங்க வேண்டும், லாரி உரிமையாளர்களுக்கு பாரம் ஏற்றியவுடன் மொத்த வாடைகையில் 80 சதவீதம் முன்தொகையும், பாரம் இறக்கியவுடன் மீதம் உள்ளதொகையை 24 மணி நேரத்தில் வாகனத்தின் உரிமையாளர்கள் வங்கி கணக்கில் மட்டுமே செலுத்த வேண்டும், பாரங்கள் ஏற்றவோ, இறக்கவோ லாரியின் ஓட்டுநர்கள் மற்றும் கிளீனர்களையோ பயன்படுத்தக்கூடாது, பாரங்கள் ஏற்றிச்செல்லும்வழியில் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாலும், அவ்வவ்போது திருட்டுகளும் நடப்பதால் வாகனத்தில் ஏற்றப்படும் பாரங்களின் மதிப்பு அதிகம் இருப்பதால் சரக்குகளின் உரிமையாளர் தான் அவருடைய செலவில் பொருள்களுக்கு காப்பீடு செய்து கொள்ள வேண்டும், அதற்கு லாரி உரிமையாளர்கள் பொறுப்பு அல்ல என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் சங்கத்தின் சார்பில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இத்தீர்மானங்கள் குறித்து மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்திற்கும், ஈரோடு, கோவை, திருப்பூர் ஜவுளி உற்பத்தியாளர்கள், ஜவுளி பாரங்கள் அனுப்பும் முகவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. விரைவில் அதற்கு அவர்கள் நல்ல தீர்வு காண வேண்டும். இல்லையெனில் மாநில சம்மேளனத்தின் அனுமதியுடன் அடையாள வேலைநிறுத்தமாக அடுத்த மாதம் 3 நாள்கள் லாரிகளில் ஜவுளி பாரங்களை ஏற்றாமல் புறக்கணிக்க உள்ளோம் என்றார். மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் எம்.குமாரசாமி பேசியது:- லாரிகளில் ஜவுளி பாரங்கள் ஏற்றுவதில் உள்ள சிரமங்கள் குறித்து சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளனர். இக்கோரிக்கைகளை ஜவுளி உற்பத்தியாளர்கள், ஜவுளி பாரங்கள் அனுப்பும் முகவர்கள் விரைவில் தீர்வுகாண வேண்டும். சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்களை மாநில சம்மேளனத்திடம் வழங்கியுள்ளனர்.
அனைத்து லாரி உரிமையளர்கள் கோரிக்கையைடுத்து மாநில சம்மேளனத்தின் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிர்வாககுழு கூட்டத்தில் முதற்கட்டமாக 3 நாள்கள் ஜவுளி பாரங்களை லாரிகளில் ஏற்றாமல் புறக்கணிப்பது என முடிவு செய்து அதற்கான தேதிகளை அறிவிக்க இருக்கிறோம். மேலும் அவர் அதற்குள் லாரி உரிமையாளர்களின் கோரிக்கையினை சம்மந்தபட்டவர்கள் விரைவில் பரிசிலிக்க வேண்டும் என்றார். பவானி-குமாரபாளையம் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் முத்துசாமி, துணைத்தலைவர் பரமசிவம், செயலர் வி.பி.செல்வராஜா, ஈரோடு தலைவர் துரைசாமி, பொருளாளர் கோபாலகிருஷ்ணன், அரூர் சங்கத்தின் செயலர் இளையரசு ஆகியோர் பேசினர். சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் செயலர் கே.கே.நடேசன் முன்னிலை வகித்தார். முன்னதாக பொருளாளர் என்.மோகன்குமார் வரவேற்றார். துணைத்தலைவர் ஆர்.ஆர்.மோகன்குமார், இணைச் செயலர் எம்.சின்னதம்பி, நிர்வாககுழு உறுப்பினர்கள், ஜவுளி பாரங்கள் அனுப்பும் முகவர்கள் உள்ளிட்ட பலர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.