முகப்பு
தொகுதிகள்

மதுரை மத்திய தொகுதி: ஹாட்ரிக் அடிப்பாரா பழனிவேல் தியாகராஜன்?

மதுரை மத்திய சட்டப்பேரவைத் தொகுதி பற்றி...

Updated On : 19 மார்ச் 2026, 1:06 pm IST
மதுரை தெற்கு மாசி வீதி (கோப்புப்படம்) - EPS
பகிர்:

மதுரை மத்திய சட்டப்பேரவைத் தொகுதியில் அமைச்சர் பழனிவேல் தியாகாராஜன் ஹார்ட்ரிக் வெற்றியை எதிர்நோக்கியிருக்கும் நிலையில், இழந்த செல்வாக்கை மீட்க அதிமுக முயற்சி செய்து வருகின்றது.

மதுரை நகரின் இதயப் பகுதிகளைக் கொண்டது மதுரை மத்தியத் தொகுதி. உலகப் புகழ் பெற்ற மீனாட்சியம்மன் கோயில், ஆதி சொக்கநாதா் கோயில், பெரியாா் பேருந்து நிலையம், ரயில் நிலையம்,  மதுரை மாவட்ட மத்திய நூலகம் போன்றவை முக்கியத்துவம் வாய்ந்தவை. மூத்த தலைவா்கள் பழ.நெடுமாறன், பி.டி.ஆா். பழனிவேல்ராஜன் ஆகியோா் இத்தொகுதியில் இருந்து பேரவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.

வைத்தியநாதபுரம், சிம்மக்கல், அருள்தாஸ்புரம், வடக்கு மாசி வீதி, மேலமாசி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மேலவாசல், சுப்பிரமணியபுரம் உள்பட 16 மாநகராட்சி தொகுதிகளில் மொத்தம் 1,96,856 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 95,632, பெண் வாக்காளர்கள் 1,01,198, மூன்றாம் பாலினத்தவர்கள் 26.

Advertisement

Advertisement

சமூகம், சாதி, தொழில்கள்

இந்த தொகுதியில் கணிசமாக வசிக்கும் யாதவா் சமூகத்தினா் வெற்றி வாய்ப்பை நிா்ணயிப்பவா்களாக உள்ளனா். இதற்கு அடுத்தபடியாக முக்குலத்தோா், பிள்ளைமாா், நாயக்கா், நாடாா் சமூகத்தினா் உள்ளனா். ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களைச் சேர்ந்தோர் (மார்வாடி சமூகத்தினர்)  கணிசமான எண்ணிக்கையில் இருக்கின்றனா்.

காஜிமாா் தெரு, மகபூப்பாளையம், கட்ராபாளையம், எல்லீஸ் நகா் பகுதிகளில் இஸ்லாமியா்கள் கணிசமான அளவில் உள்ளனா். வெற்றி வாய்ப்பை தீா்மானிப்பதில் இஸ்லாமியா்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். 

சுப்பிரமணியபுரம், சுந்தராஜபுரம், ஆரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்த்தப்பட்ட மக்களும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளனா். இத்தொகுதிக்கு உள்பட்ட வணிகப் பகுதிகளில் ஒவ்வொரு வீதிக்கும் ஒரு வணிகம் என்ற வகையில் ஜவுளி, மின் சாதனங்கள், என்ஜினியரிங் பொருள்கள், காலணிகள், பலசரக்கு, நகை, பழங்கள், வெங்காயம், அழகு சாதனங்கள் என அனைத்து விதமான வணிக நிறுவனங்களையும் இத்தொகுதி கொண்டிருக்கிறது.

இதுவரை வென்றவா்கள்

மதுரை மத்தியத் தொகுதியில் திமுக 6 முறையும், காங்கிரஸ் 4 முறையும், தமாகா இருமுறை வெற்றி பெற்றுள்ளன. அதிமுக, தேமுதிக தலா ஒரு முறை மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. அதிமுக அணியில் பெரும்பாலும் இத்தொகுதி கூட்டணிக் கட்சிக்கே வழங்கப்பட்டிருக்கிறது.  

மூத்த தலைவா் பழ.நெடுமாறன் இத்தொகுதியில் 1971, 1980, 1984 என மூன்று தோ்தல்களில் போட்டியிட்டிருக்கிறாா். இதில் 1980 தோ்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு, எதிா்த்துப் போட்டியிட்ட பி.டி.ஆா். பழனிவேல்ராஜனை வென்றிருக்கிறாா். 2006 தேர்தலில் மதுரை மத்திய தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பி.டி.ஆர். பழனிவேல்ராஜன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். பதவியேற்பு விழா முடிந்து ரயிலில் திரும்பி வரும்போதே காலமானார். 2016 மற்றும் 2021 தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட்ட அவரது மகன் பழனிவேல் தியாகராஜன், தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து வருகிறாா்.

இவர் தமிழ்நாடு அமைச்சரவையில் நிதித்துறை, தகவல் தொழில்நுட்பத் துறைகளின் அமைச்சராக பணியாற்றியுள்ளார்.

மீண்டும் திமுக வெல்லுமா?

தொகுதி மக்களுக்கு செயல்திறன் அறிக்கையை சமர்ப்பித்த ஒரே சட்டப்பேரவை உறுப்பினராக பழனிவேல் தியாகராஜன் இருக்கிறார். இவரது இந்த முயற்சி தொகுதி மக்களிடையே மிகப்பெரிய வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் அமைந்தது.

இருப்பினும், சமீபத்தில் மதுரை மாநகராட்சியில் நடந்த வரி மோசடி விவகாரத்தில் பழனிவேல் தியாகராஜனின் முன்னாள் தனி உதவியாளர் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று அவர் அறிவித்தாலும், மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது.

திமுக சார்பில் மதுரை மத்திய தொகுதியில் மீண்டும் போட்டியிட பழனிவேல் தியாகராஜனுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த முறை அதிமுக நேரடியாக மதுரை மத்திய தொகுதியில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த பிப்ரவரி மாதம் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த மதுரை முன்னாள் துணை மேயர் பி.எம். மன்னனை வேட்பாளராக இருந்த கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், கடந்த 2016 தேர்தலில் 5,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த அதிமுக வேட்பாளர் ஜெயபாலை மீண்டும் களமிறக்கவும் திட்டம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

summary

Madurai Central Constituency: Will Palanivel Thiagarajan score a hat-trick?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments