FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அனைவருக்குமான முதல்வராக உயரும் ஜோசப் விஜய்!

முதல்வர் ஜோசப் விஜய்யின் மதுரை பயணம் பற்றி.....

1 October 2026, 4:13 am IST
முதல்வர் விஜய்.
பகிர்:

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற ச. ஜோசப் விஜய் முதல் முறையாக கடந்த 28-ஆம் தேதி மதுரைக்கு வந்தார். தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத் தொடக்க விழா நடைபெற்ற மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் சுற்றுப் பகுதிகளில் இரு நாள்களுக்கு முன்பாகவே காவல் துறையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடத் தொடங்கினர்.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தைத் தொடங்கி வைப்பதற்காக வந்த அவரை வரவேற்க விரகனூர் சந்திப்பு, குருவிக்காரன் சாலை, அரசு ராஜாஜி மருத்துவமனை அமைந்துள்ள பனகல் சாலை உள்பட அவரது பயணப் பாதைப் பகுதிகளில் செப். 26-ஆம் தேதியன்றே பதாகைகள் அமைக்கப்பட்டன. ஆங்காங்கே உயரமான கம்பங்கள் நடப்பட்டு, அவற்றில் தவெக கொடிகள் கட்டப்பட்டன.

இந்த முன்னேற்பாடுகள் காரணமாக, மதுரை விமான நிலையம் முதல் அரசு ராஜாஜி மருத்துவமனை வரையிலான பகுதிகளில் முதல்வரை வரவேற்க சாலையின் இருபுறங்களிலும் நூற்றுக்கணக்கான விளம்பரப் பதாகைகள் அமைக்கப்படும்; வழிநெடுகிலும் இருபுறங்களிலும் தவெக கொடிகள் பறக்கும்; போக்குவரத்து பாதிக்கப்படும்; மதுரை அரசு மருத்துவமனையில் மக்களுக்கான மருத்துவ சேவை ஓரிரு நாள்கள் தடைபடும் என்ற அச்சம் மதுரை மக்களிடம் பரவலாக இருந்தது.

Advertisement

Advertisement

ஆனால், தமிழக முதல்வர் ஜோசப் விஜய் திங்கள்கிழமை (செப். 28) மதுரைக்கு வந்தபோது, அவர் சாலை வலம் மேற்கொண்ட மதுரை விமான நிலையம் முதல் அரசு ராஜாஜி மருத்துவமனை வரையிலான 14 கி.மீ. தொலைவில் ஒரு வரவேற்புப் பதாகைகூட இல்லை. இதேபோல, ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த உயரமான கொடிக் கம்பங்களும் இல்லை. மேலும், முதல்வரின் வருகைக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு வரையிலும் ராஜாஜி அரசு மருத்துவமனை அமைந்துள்ள பனகல் சாலையின் பொதுப் போக்குவரத்துக்கு எந்தவிதத் தடையும் விதிக்கப்படவில்லை. மருத்துவமனையில் பொதுமக்கள் மருத்துவ சேவைக்கும் நீண்ட நேரம் தடை ஏற்படவில்லை.

தனது வருகையால் பொதுப் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் எந்தவித இடையூறும் ஏற்படக் கூடாது என முதல்வர் ச. ஜோசப் தெரிவித்த ஒற்றை அறிவுறுத்தலே இத்தனைக்கும் காரணம் எனக் கூறப்படுகிறது. இந்த உத்தரவின் காரணமாகவே, ஏற்கெனவே அமைக்கப்பட்டிருந்த வரவேற்புப் பதாகைகள், கட்சிக் கொடிகள் செப். 27-ஆம் தேதி இரவோடு இரவாக அகற்றப்பட்டதாகத் தெரியவருகிறது.

முந்தைய காலங்களில் முதல்வர்களின் வருகையின்போது பொதுவெளிகளை ஆக்கிரமித்து பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக அமைக்கப்படும் பிரம்மாண்ட பதாகைகள், கொடிகள் இல்லாமல், மதுரையில் ஏறத்தாழ 28 கி. மீ. தொலைவு சாலை வலத்தை முதல்வர் ஜோசப் விஜய் மேற்கொண்டது பொதுமக்களிடையே மகிழ்ச்சியையும், மதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம், முதல்வர் ஜோசப் விஜய் மதுரை மக்களின் மனதில் தன்னை உண்மையான "ஜனநாயகனாக' பதிவு செய்துவிட்டார் என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்து.

தவெக அரசு அமைந்த பிறகு நடைபெற்ற மிகப் பெரிய கோயில் குடமுழுக்கு விழா மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு. இந்த விழாவில் முதல்வர் பங்கேற்க வேண்டும் என பல தரப்பினர் அழைப்புவிடுத்தும் அவர் பங்கேற்கவில்லை. இந்த விழாவைப் பொருத்தவரை சித்திரை வீதியில் பக்தர்களை அனுமதிக்கவில்லை என்பது பரவலாக விமர்சனம் என்பதை மறுப்பதிற்கில்லை. ஆயிரம் வருத்தங்கள், மனக்கசப்புகள் இருந்தாலும், பல்லாயிரக்கணக்கானோர் கூடிய இந்த விழாவில் எந்தவித அசம்பாவிதத்துக்கும் இடமளிக்காதது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாக தவெக தலைவராக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சென்ற அவர், அங்கு வேல் காணிக்கை செலுத்தி வழிபட்டார். இருப்பினும், அதன் பிறகு திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முந்தைய அரசின் நிலைப்பாட்டையே தவெக அரசும் பின்பற்றியது. இதனால், முதல்வர் ஜோசப் விஜய் தன்னை சிறுபான்மையினரின் முகமாகவே அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புகிறார் எனக் கருதப்பட்டது.

இதன் காரணமாக, கடந்த 28-ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற அரசு விழாவுக்கு வந்தபோது, மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்கு செல்வாரா? என்பது எதிர்பார்ப்புக்குரியதாக இருந்தது. இந்தக் கோயிலில் மாற்று மதத்தினர் சுவாமி தரிசனம் செய்ய வேண்டுமெனில் இந்து மத வழிபாட்டில் தனக்கு நம்பிக்கை உள்ளது என எழுத்துபூர்வமாக உறுதி அளிக்க வேண்டியது அவசியம். இந்த உறுதியை முதல்வர் அளிப்பாரா என்பதே எதிர்பார்ப்புக்கு முக்கியக் காரணமாக இருந்தது.

இந்த நிலையில், செப். 28-ஆம் தேதி மாலை முதல்வர் ச. ஜோசப் விஜய் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்குச் சென்றார். முதல்வர் விஜய்யும், அவரது தனிப் பாதுகாவலர் நயீம்முசாவும் தங்களுக்கு இந்து மத வழிபாட்டில் நம்பிக்கை உள்ளதாக எழுத்துபூர்வமாக உறுதி அளித்தனர் என்பதை கோயில் நிர்வாகம் உறுதிப்படுத்துகிறது. எந்த விதத்திலும் ஆலய விதிமுறைகளை தான் மீற விரும்பவில்லை என்று முதல்வர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

கோயில் வாசலில் பூர்ணகும்ப மரியாதை வரவேற்பின்போது அளிக்கப்பட்ட விபூதி, குங்குமத்தை நெற்றியில் தரித்துக் கொண்டு அம்மன் சந்நிதி, சுவாமி சந்நிதிகளில் முதல்வர் தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்து விமான நிலையத்துக்கு சாலை வலமாகப் புறப்பட்ட முதல்வர் நெற்றியில் தரித்த விபூதி, குங்குமத்துடனேயே தனது பயணத்தைத் தொடர்ந்தார்.

இதன்மூலம், சிறுபான்மையினரின் வாக்குகளைக் கவருவதற்காக, கோயிலிலிருந்து வெளியே வந்ததும் தான் தரித்திருந்த விபூதி, குங்குமத்தைக் கலைத்துவிடுவார் என்ற ஊகங்களைப் பொய்யாக்கி, சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் என அனைவருக்குமான முதல்வராக ஜோசப் விஜய் தனது அடையாளத்தை உறுதி செய்துவிட்டார் என்கின்றனர் நடுநிலையாளர்கள்.

இதேபோல, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு விழா அழைப்பிதழில் அறங்காவலர் குழுத் தலைவர், உறுப்பினர்களின் பெயர்கள் இடம்பெறாததும், தனது தாய் ருக்மணி பழனிவேல் ராஜனை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் பதவியிலிருந்து விலகுமாறு கோயில் நிர்வாகம் வற்புறுத்துவதாகவும் முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை கோயிலுக்கு வந்த முதல்வர் ஜோசப் விஜய்யை அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல் ராஜன் பொன்னாடை அளித்து வரவேற்றார்.

அப்போது, உடனிருந்த அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், ருக்மணி பழனிவேல் ராஜன் முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தாய் என்பதை முதல்வரிடம் தெரிவித்தார். உடனே ருக்மணி பழனிவேல் ராஜனிடம் நலம் விசாரித்ததுடன், பணிந்து ஆசியும் பெற்றார் முதல்வர் விஜய். முதல்வரின் இந்த நாகரிக நடைமுறை, அவரை விமர்சித்தவர்களுக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

தன்னை அனைவருக்குமான முதல்வராகவும், உண்மையான ஜனநாயகனாகவும் நிலைநிறுத்திக் கொள்ளும் முனைப்பில் முதல்வர் ச.ஜோசப் விஜய் வெற்றியடைந்திருப்பதற்கான அடையாளமாக அவரது மதுரை விஜயம் பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments