சேலம்

ஏத்தாப்பூரில் விபத்து அவசர சிகிச்சை மையம் அமைக்க வேண்டுகோள்

DIN

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே ஏத்தாப்பூரில் 15 ஆண்டுகளுக்கு முன் பயன்பாட்டில் இருந்த அரசு தொழுநோய் சிகிச்சை மையம் மற்றும் காப்பகம் மூடப்பட்டதால் பாழடைந்து பயனற்றுக் கிடக்கிறது.

இப்பகுதியில், சாலை விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையம் அமைக்கும் திட்டத்தை நிறைவேற்ற தமிழக நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது.

30 ஆண்டுகளுக்கு முன் ஏத்தாப்பூரில் தொழுநோயாளிகள் சிகிச்சை மையம் மற்றும் காப்பகம் அமைக்கப்பட்டது.

இதுமட்டுமின்றி, தொழு நோயாளிகளின் குழந்தைகள் படிப்பதற்கு வழிவகை செய்யும் வகையில் காப்பக வளாகத்திலேயே அரசு தொடக்கப்பள்ளியும் இயங்கி வந்தது. நாளடைவில் தொழுநோயாளிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து போனதால், தொழுநோய் சிகிச்சை மையம் மற்றும் காப்பகம், 15 ஆண்டுகளுக்கு மேலாக பயனாளிகளின்றி மூடிக்கிடக்கிறது. இக்காப்பகத்தின் ஒரு பகுதி கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராயச்சி மையத்துக்கு ஒதுக்கப்பட்டது.

பல ஆண்டுகளாக பயன்பாடின்றி மூடிக்கிடக்கும் இந்த தொழுநோய் சிகிச்சை மையம் மற்றும் காப்பகத்தின் ஓட்டுக்கூரை கட்டடங்கள் பராமரிப்பின்றி சிதைந்து பாழடைந்து கிடக்கின்றன.

கடந்த 2011-12 ம் ஆண்டு இப்பகுதியில் சாலை விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையம் அமைக்க திட்டமிட்டு ஆய்வு செய்தனா்.

சேலம் - உளுந்தூா்பேட்டை நான்கு வழிச்சாலையில், சேலம் உடையாப்பட்டியில் இருந்து ஆத்தூா் தலைவாசல் வரை அரசின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையங்கள் இல்லாததால், விபத்தில் சிக்கியவா்களை, போக்குவரத்து நெரிசல் மிகுந்த சேலம் அல்லது ஆத்தூருக்கு அழைத்துச் செல்ல வேண்டியுள்ளது.

எனவே, பயன்பாடின்றி மூடிக்கிடக்கும் ஏத்தாப்பூா் தொழுநோய் சிகிச்சை மற்றும் காப்பகத்தில், ஏற்கெனவே திட்டமிட்டபடி, நவீன வசதிகளுடன் கூடிய நெடுஞ்சாலை விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையம் அமைக்க, மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

SCROLL FOR NEXT