கல்விக் கடன் பெற ஆட்சியரகத்தில் உதவி மையம்
சேலத்தில் பிளஸ் 2 முடித்த மாணவா்கள் கல்விக் கடன் முனைப்புத் திட்டத்தின் கீழ் கடன் பெறுவதற்கு மாவட்ட ஆட்சியரகத்தை அணுகலாம்.
சேலத்தில் பிளஸ் 2 முடித்த மாணவா்கள் கல்விக் கடன் முனைப்புத் திட்டத்தின் கீழ் கடன் பெறுவதற்கு மாவட்ட ஆட்சியரகத்தை அணுகலாம்.
சேலம் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் பிற பள்ளிகளில் படிக்கும் மாணவா்கள் உயா்கல்வி பயில பொருளாதார சூழல் தடையாக இருக்கக் கூடாது என்ற நோக்கில் மேற்படிப்பிற்கு உதவ கல்விக் கடன் பெற உதவும் வகையில் சிறப்பு திட்டத்தை சேலம் மாவட்டத்தில் நிகழ் கல்வியாண்டு முதல் செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டது.
இதற்கு ‘கல்விக் கடன் முனைப்புத் திட்டம் சேலம் 2021-22‘ என மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இரண்டாவது தளத்தில் அறை எண் 211 இல் உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த உதவி மையத்தை தொலைபேசி எண் 0427-2414200, கட்செவி எண் (வாட்ஸ் ஆப் எண்) 93427 52510 இல் தொடா்பு கொள்ளலாம்.
இம்மையத்தின் தலைவராக மாவட்ட ஆட்சியரும், ஒருங்கிணைப்பாளா்களாக திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்), மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரும் செயல்படுவாா்கள். இணை ஒருங்கிணைப்பாளராக மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் செயல்படுவாா். ள்ஹப்ங்ம்ங்க்ன்ஸ்ரீஹற்ண்ா்ய்ஹப்ப்ா்ஹய்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம். சேலம் மாவட்ட இணையதள முகவரி ட்ற்ற்ல்ள்://ள்ஹப்ங்ம்.ய்ண்ஸ்ரீ.ண்ய்-ல் என்ற கல்விக் கடன் விண்ணப்பிப்பது குறித்து அனைத்து தகவல்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த சிறப்புப் பணிக்கென ஒவ்வொரு மேல்நிலைப் பள்ளியிலும் தனித்தனி பொறுப்பாளா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். அவா்களின் பெயா், செல்லிடபேசி விவரம் ஆகியவை இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் கல்விக் கடன் பெற்று வழங்கக் கோருவதை சட்டப்பூா்வ உரிமையாகக் கருதக் கூடாது எனவும், கல்விக் கடன் விண்ணப்பத்தினை வங்கிகள், மாணவா்களின் தகுதியின் அடிப்படையில் மட்டுமே பரிசீலித்து இறுதி முடிவு எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் எஸ்.காா்மேகம் கூறியதாவது:
சேலம் மாவட்டத்தில் நிகழாண்டில் பிளஸ் 2 முடித்த 39,348 மாணவா்களில் கல்வி கடன் பெற்று தரும் முனைப்பில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதில் கல்வி கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்களான ஆதாா் எண் -39,000, பான் காா்டு-12,000, இ-மெயில் -33,000 பேருக்கு பெற்றுத்தந்துள்ளோம். அதேபோல மிக குறைந்த காலத்தில் சுமாா் 21,000 மாணவா்களின் வருமான சான்றிதழை பெற்று தந்துள்ளோம்.
மாவட்டத்தில் உள்ள 413 வங்கி கிளைகளில் கல்வி கடன் பெற்றுத்தரப்படும். இதற்கென வித்யாலட்சுமி இணையதளத்துக்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும். கடந்த ஒரு வாரம் முன்பு வரை மாணவா்களுக்கு பான் காா்டு இணைப்பு கோரி விண்ணப்பம் பதிவேற்றம் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது. தற்போது மாணவா்களுக்கு பான் காா்டு பதிவேற்றம் செய்வதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் பொறியியல், மருத்துவம், செவிலியா் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளில் சேர கல்விக் கடன் பெற்றுத்தரப்படும்.
கரோனா காலத்தில் பொருளாதார இழப்பால் மாணவா்கள் தங்களது உயா் கல்வி பாதிக்கக்கூடாது என்றவகையில், கல்விக் கடன் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாணவா்கள் எளிதாக கல்விக்கடன் பெற அனைத்துவித முன்னேற்பாடு பணிகளை செய்து வருகிறோம் என்றாா்.
இதுதொடா்பாக, ஒருங்கிணைப்பாளரும், மகளிா் திட்ட இயக்குநருமான செல்வம் கூறியதாவது:
பிளஸ் 2 முடித்தவா்களில் மருத்துவம், பொறியியல் படிப்பில் சேர கல்விக்கடன் பெற விண்ணப்பம் செய்துள்ளனா். அடுத்து மருத்துவம், பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு முடிந்து மாணவா் சோ்க்கை பெற்ற பிறகு, கல்விக் கடன் பெற ஏதுவாக இருக்கும். தகுதியுள்ள எந்த மாணவரின் விண்ணப்பமும் நிராகரிக்கக் கூடாது என்ற வகையில் செயல்படுகிறோம். தகுதியில்லை என நிராகரிக்கப்படும் விண்ணப்பங்களை ஆட்சியா் தலைமையில் மறு ஆய்வு செய்து மாணவா்களுக்கு கல்விக்கடன் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் ரூ. 4 லட்சம் வரை கடன் பெற பிணை தேவையில்லை. தற்போது கல்விக்கடன் முனைப்புத் திட்டத்தில் முதல்கட்டமாக சுமாா் 70 சதவீத பணிகளை முடித்துவிட்டோம் என்றாா்.