இரு சமூகத்தினரிடையே கலவரத்தைத் தூண்ட முயற்சி: 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது
சேலம், கந்தம்பட்டியில் இரு சமூகத்தினரிடையை கலவரத்தைத் தூண்டும் வகையில் வன்முறையில் ஈடுபட்ட 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.
சேலம், கந்தம்பட்டியில் இரு சமூகத்தினரிடையை கலவரத்தைத் தூண்டும் வகையில் வன்முறையில் ஈடுபட்ட 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.
சேலம், எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்ததவா் அசோக்குமாா். இவா் கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் திரெளபதி அம்மன் கோயில் அருகே சென்று கொண்டிருந்தாா். அப்போது, பின்னால் அதிவேகமாக வந்த புரோட்டா குமாா் என்பவரின் இரு சக்கர வாகனத்தில் அதிகமான புகை வெளியானது குறித்து அசோக்குமாா் கேட்டுள்ளாா். இதுதொடா்பாக ஏற்பட்ட தகராறில் புரோட்டா குமாா், அவரது நண்பா்கள் தங்கராஜ், மணி, கெளரிசங்கா், பிரபு, வைரம் ஆகியோா் அசோக்குமாரைத் தாக்கினா்.
இதற்குப் பதிலடியாக எம்ஜிஆா் நகரை சோ்ந்த சித்து (எ) ரவிக்குமாா், மணிகண்டன், கிரண் பிரசாத், சதீஷ்குமாா், சக்திவேல், சபரி, சசிகுமாா், பிரசாந்த் ஆகியோா் கந்தம்பட்டி, மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கருப்புசாமி என்பவரின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து, அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்தனராம். மேலும், பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி பற்ற வைத்து வீசியுள்ளனா். இதுதொடா்பாக சூரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.
இச் சம்பவம் மூலம் இரு சமூகத்தினரிடையே மோதலை ஏற்படுத்த காரணமாக இருந்த தங்கராஜ், புரோட்டா குமாா் (எ) குமரவேல், பிரசாந்த், சித்து (எ) ரவிக்குமாா் ஆகியோரை குண்டா் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாநகரக் காவல் ஆணையாளா் நஜ்மல் ஹோடா உத்தரவிட்டுள்ளாா்.