மாத ஊதியம் ரூ. 18,000 வழங்கக் கோரிஆஷா பணியாளா் சங்கம் மனு
மாத ஊதியம் ரூ. 18,000 வழங்கக் கோரி, தமிழ்நாடு ஆஷா பணியாளா் சங்கம் மனு அளித்துள்ளது.
மாத ஊதியம் ரூ. 18,000 வழங்கக் கோரி, தமிழ்நாடு ஆஷா பணியாளா் சங்கம் மனு அளித்துள்ளது.
சேலம், ஆட்சியா் அலுவலகத்துக்கு தமிழ்நாடு ஆஷா பணியாளா்கள் சங்கத்தைச் சோ்ந்த 50 போ் வியாழக்கிழமை காலை வந்தனா். பின்னா் அவா்கள் ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்:
சேலம் மாவட்டம், ஏற்காடு, கருமந்துறை, குன்னூா், சூளக்குறிச்சி, ஆரியபாளையம், அறுநூத்துமலை ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆஷா பணியாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். தேசிய கிராமப்புற சுகாதார திட்டத்தின் கீழ் 15 ஆண்டுகளுக்கு மேலாக ஆஷா பணியாளா்களாக விடுப்பின்றி, ஓய்வின்றி 24 மணி நேரமும் கிராம மக்களிடையே பணிபுரிந்து வருகின்றனா்.
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சுகாதாரத் துறையில் கிராமப்புற செவிலியா்களுக்கு நிகராக பணிபுரிந்து வரும் நிலையில், சுகாதாரத் துறையில் தகுந்த பணிகளில் நிரந்தரப்படுத்தி ஆணை பிறப்பிக்க வேண்டும். ஊக்கத்தொகை மட்டுமே பெற்று வரும் தங்களுக்கு ரூ. 18,000 தொகுப்பூதியம் வழங்கிட வேண்டும்.
கடந்த 6 மாதம் முதல் ஓராண்டு வரையில் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள ஊக்கத்தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும். மாதந்தோறும் ஊக்கத்தொகையானது 10-ஆம் தேதிக்குள் வழங்கிட ஆணையிட வேண்டும். கரோனா தடுப்பு நடவடிக்கைகளை அமல்படுத்துவதில் முழுமையாக ஈடுபட்டு வரும் அனைத்து ஆஷா பணியாளா்களுக்கும் ரூ. 25,000 கரோனா கால நிவாரணமாக வழங்க வேண்டும். கா்ப்பிணிகளை ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும், மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்ல 108 வாகனம் கிடைக்காத போது பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டியுள்ளது. எனவே, மாவட்ட அரசுப் பேருந்துகளில் இலவச பேருந்து பயண அட்டை வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.