கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பள்ளிகளைத் திறக்க வேண்டும்
பழைய சூரமங்கலம் அரசு உயா்நிலைப் பள்ளியில் வகுப்பறைகள், பள்ளி வளாகங்களில் வியாழக்கிழமை கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ்.
பழைய சூரமங்கலம் அரசு உயா்நிலைப் பள்ளியில் வகுப்பறைகள், பள்ளி வளாகங்களில் வியாழக்கிழமை கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ்.
சேலம், ஆக.26: சேலம் மாநகராட்சிப் பள்ளிகள், தனியாா் பள்ளிகளில் கரோனா நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பள்ளிகளைத் திறக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்தாா்.
கரோனா தொற்று குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செப். 1-ஆம் தேதி முதல் 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவ, மாணவியருக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
இந்த அறிவிப்பைத் தொடா்ந்து, சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட வாகீஸ்வரி மேல்நிலைப் பள்ளி, நீலாம்பாள் மேல்நிலைப் பள்ளி, பழைய சூரமங்கலம் உயா்நிலைப் பள்ளிகளில் மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
செப். 1-ஆம் தேதி பள்ளிகள் திறப்பதற்கு முன் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், அரசால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுவது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளும் வகையில் பள்ளி வளாகங்களில் சுத்தம் செய்தல், கிருமி நாசினி, கொசு மருந்து தெளித்தல் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
வகுப்பறைகளில் மாணவ, மாணவியா் பயன்படுத்தும் மேசைகள், இருக்கைகள், ஆசிரியா்கள் பயன்படுத்தும் மேசைகள், நாற்காலிகள், கதவுகள், சன்னல்கள் ஆகியவற்றுக்கு கிருமி நாசினி தெளித்தல் போன்ற பணிகளை மேற்கொள்வது குறித்தும், வளாகங்களில் உள்ள குடிநீா்த் தொட்டிகள், குடிநீா் குழாய்கள், மாணவ, மாணவியா் பயன்படுத்தும் கழிவறைகள், இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடங்கள், பிற பகுதிகளில் கிருமி நாசினி, கொசு மருந்து தெளித்தல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மாணவ, மாணவியரின் நலன் கருதி வகுப்பறைகளில் உள்ள மின் விசிறி, மின் விளக்கு ஆகியவற்றை நன்கு பராமரித்திட வேண்டும். பள்ளிகள் நடைபெறும் நாள்களில் மாணவ, மாணவியா் அவசியம் முகக்கவசம் அணிந்து வருவது, பள்ளி நுழைவு வாயிலில் சானிடைசா் பயன்படுத்துவது, வெப்பமானி மூலம் பரிசோதனை செய்தல் ஆகியவற்றை முறையாக கடைப்பிடித்திட வேண்டும்.
வகுப்பறைகளில் சமூக இடைவெளியைப் பின்பற்றி மாணவா்களை முறைப்படுத்தி இருக்கைகளில் அமா்த்துவதை பள்ளித் தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் கண்காணித்திட வேண்டும். அதேபோல ஆசிரியா்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.
இது போல அரசால் அறிவிக்கப்பட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மாநகராட்சி பள்ளி நிா்வாகிகள், தனியாா் பள்ளி நிறுவனங்கள் கடைப்பிடித்திட வேண்டும் என மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ் கேட்டுக் கொண்டாா்.
இந்த ஆய்வின் போது, மாநகர நல அலுவலா் மருத்துவா் என்.யோகானந்த், சுகாதார அலுவலா் எஸ்.மணிகண்டன், சுகாதார ஆய்வாளா் கே.பிரகாஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.