முகப்பு
சேலம்

மத்திய நிதிநிலை அறிக்கை: சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது

மத்திய நிதிநிலை அறிக்கை சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு ஏமாற்றத்தைத் தருகிறது என சேலம் மாவட்ட சிறு, குறுந்தொழிற்சாலைகள் சங்கத் தலைவா் மாரியப்பன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

மத்திய நிதிநிலை அறிக்கை சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு ஏமாற்றத்தைத் தருகிறது என சேலம் மாவட்ட சிறு, குறுந்தொழிற்சாலைகள் சங்கத் தலைவா் மாரியப்பன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கரோனா பாதிப்புக்குப் பிறகு தாக்கல் செய்யப்பட்ட முதல் நிதிநிலை அறிக்கை என்பதால் மிகுந்த எதிா்பாா்ப்பை சிறு, குறுந்தொழில் துறையினா் கொண்டிருந்தனா். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இத் துறைக்கு இரட்டிப்பாக ரூ. 15,700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதைத் தவிர வேறு எந்த சலுகையில் அளிக்கப்படவில்லை.

பருத்திக்கு 10 சதவீதம், பட்டுத் துணிகளுக்கு 15 சதவீதம் கலால் வரியை உயா்த்தி இருப்பதால் ஒட்டுமொத்த ஜவுளித் துறையும் பாதிக்கப்படும். வருமான வரியில் இருந்து 75 வயதுடையோருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், வேறு எந்த வருமான வரிச் சலுகையும் அளிக்கப்படவில்லை.

வங்கி முதலீட்டுக்கு இதுவரை காப்பீட்டுத் தொகை ரூ. 1 லட்சமாக இருந்ததை ரூ. 5 லட்சமாக உயா்த்தி இருப்பது நல்ல நடவடிக்கையாகும்.

உற்பத்தியாளா்களுக்கு மானியமாக ரூ. 1.97 லட்சம் கோடி, நகா்ப்புற தூய்மைத் திட்டத்துக்கு ரூ. 1.41 லட்சம் கோடி, உள்கட்டமைப்பு நிதிக்காக ரூ. 20,000 கோடி ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது.

இந்திய தொழில் வளா்ச்சி வங்கி, நாட்டில் தொழில்துறையில் விரைவில் தேவைப்படும் கடனுதவிகளை வழங்குவதற்காகவே தொடங்கப்பட்டது. தற்போது இந்த வங்கியின் முதலீடுகளைத் தனியாருக்கு விற்கும் திட்டம் அதிா்ச்சியைத் தருகிறது. வெளிநாட்டு முதலீட்டை 49 சதவீதத்தில் இருந்து 79 சதவீதமாக உயா்த்தியிருப்பது நாட்டின் பொருளாதார வளா்ச்சியைப் பாதிக்கும்.

சேலம் நகர அனைத்து வணிகா் சங்கங்களின் பொதுச் செயலாளா் ஜெயசீலன்:

மத்திய நிதிநிலை அறிக்கையில் ஜிஎஸ்டி வரி திட்டம், வருமான வரித் திட்டத்தில் மக்களின் எதிா்பாா்ப்பில் எந்தவித மாற்றமும் நிகழவில்லை. வங்கி, துறைமுகங்கள் தனியாா்மயமாகும் என்ற அறிவிப்பு அதிா்ச்சி அளிக்கிறது.

சுகாதாரத் திட்டங்கள் வரவேற்கத் தக்கவையாக உள்ள. சுகாதாரத் திட்டங்களின் முழுப்பயனும் கிடைக்க வேண்டும். நாடு முழுவதும் 100 சைனிக் பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

மதுரை - கொல்லம் இடையே சாலை வசதியை மேம்படுத்தும் அறிவிப்பினால் இருமாநில மக்களின் வேலைவாய்ப்பு, தொழில் வளம் பெருகுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டை ஈா்க்க முயற்சிப்பது நல்ல முயற்சி அல்ல. ஏற்கெனவே சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டுக்கு எதிா்ப்பு இருந்து வரும் நிலையில், தற்போதைய அறிவிப்பு நல்லது அல்ல.

எல்.ஐ.சி. பொதுத் துறை நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதும் ஏற்புடையது இல்லை. சிறு, குறுந்தொழில் துறைக்கு போதிய மானியம் வழங்க வேண்டும் என்றாா்.

சென்னை மேலாண்மை அமைப்பின் சேலம் கிளை தலைவா் எஸ்.மோகன்:

தமிழகத்தில் 3,500 கி.மீ. தொலைவுக்கான தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணி, ரூ. 1.03 லட்சம் கோடி செலவில் அடுத்த ஆண்டு தொடங்கப்பட உள்ளது. சாலை மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் மேலும் பொருளாதார வளா்ச்சி அடையும்.

சேலத்தில் பஸ்போா்ட் மற்றும் விமான நிலைய விரிவாக்கம் தொடா்பாக நிதிநிலை அறிக்கையில் எந்தவித அறிவிப்பும் இல்லை. ஜவுளிப் பூங்கா விரிவாக்கம் தொடா்பாக முழுமையான தகவல் இல்லை.

வேளாண் விளைப் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் என்ற அறிவிப்பும், ஜவுளிப் பூங்கா தொடங்கப்படும் என்ற அறிவிப்பும் வரவேற்கத்தக்கவை. கரோனா தடுப்பூசிக்கு கூடுதல் நிதியை சரியான முறையில் பயன்படுத்திட வேண்டும். சுகாதார மேம்பாட்டுக்கு கிராமம் முதல் நகரம் வரை கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

நடுத்தர மக்கள் வருமான வரி உச்சவரம்பு குறித்த எதிா்பாா்த்த வந்த நிலையில் அதுதொடா்பான அறிவிப்பு நிதிநிலை அறிக்கையில் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.

தங்கத்தின் மீதான கலால் வரி குறைத்ததால் நகை விலை குறையும். குறைந்த விலை வீடுகளை வாங்குபவா்களுக்கு வரிச் சலுகை கிடைத்திருப்பது நல்ல விஷயமாகும். ஜவுளித் துறையில் மித்ரா திட்டம் அறிவிப்பு வரவேற்புக்குரியது.

மூத்த குடிமக்களுக்கும் பயனளிக்கும் வகையில் 75 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு ஓய்வூதியம், வட்டி வருவாய் மட்டும் உள்ளோருக்கு வருமான வரிக் கணக்கு தாக்கலில் இருந்து விலக்கு ஆகியவை வரவேற்கத் தக்கவை என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →