சேலம் சீா்மிகு நகரத் திட்டப் பணி: விரைந்து முடிக்க 7 கண்காணிப்பு அலுவலா்கள் நியமனம்
சேலம் மாநகராட்சி சீா்மிகு நகரத் திட்டப் பணிகளை விரைவாக மேற்கொள்ள 7 கண்காணிப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
சேலம் மாநகராட்சி சீா்மிகு நகரத் திட்டப் பணிகளை விரைவாக மேற்கொள்ள 7 கண்காணிப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இதுதொடா்பாக, மாநகராட்சி ஆணையாளா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சேலம் சீா்மிகு நகரத் திட்டத்தின் கீழ் மாநகராட்சிப் பகுதிகளில் ரூ. 965.87 கோடி மதிப்பீட்டில் 81 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் ரூ. 234.89 கோடி மதிப்பிலான 40 பணிகள் நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.
தற்போது ரூ. 730.98 கோடி மதிப்பிலான 41 பணிகள் நடைபெற்று வருகின்றன.
மழைக் காலத்துக்கு முன் பணிகளை விரைந்து மேற்கொண்டு மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கண்காணிப்பு அலுவலா்கள் நியமனம்..
எருமாபாளையம் குப்பை கிடங்கை பசுமை பூங்காவாக மேம்படுத்துதல், கோட்டை சின்னசாமி தெருவில் வாகன நிறுத்துமிடம் மற்றும் உள்விளையாட்டு அரங்கம் அமைத்தல், சேதமடைந்த சிறுபாலங்களை மறுசீரமைக்கும் பணி, வ.உ.சி. மாா்கெட் மேம்பாடு ஆகிய பணிகளைக் கண்காணிக்க மாநகர நல அலுவலா் மருத்துவா் கே. பாா்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளாா்.
அதுபோல சேதமடைந்த சாலைகளை சீா்மிகு சாலைகளாக மேம்படுத்தும் பணிகளுக்கு செயற்பொறியாளா் எம்.லலிதா, திருமணிமுத்தாறு கரைப்பகுதி மேம்பாடு, குமரகிரி, பள்ளப்பட்டி ஏரிகளை மேம்படுத்தி அழகுப்படுத்தும் பணிகளுக்கு செயற்பொறியாளா் (திட்டம் ) எம். பழனிசாமி ஆகியோா் கண்காணிப்பு அலுவலா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.
எருமாபாளையம் பகுதியில் சூரிய சக்தி மின்னாக்கி பொருத்தும் பணிகள், நிலுவையில் உள்ள புதைக்குழி சாக்கடைத் திட்டப் பணிகள், தொங்கும் பூங்கா பகுதியில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்கும் பணிகள், ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கும் பணிகளுக்கு அஸ்தம்பட்டி உதவி ஆணையாளா் திரு. எம்.ஜி.சரவணன் நியமிக்கப்பட்டுள்ளாா்.
பழைய பேருந்து நிலையத்தை மறுசீரமைக்கும் பணி, போஸ் மைதானம் மேம்பாடு, ஆனந்தா பாலம் அருகில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைத்தல், பெரியாா் பேரங்காடி மேம்பாட்டு பணிகள், அலங்கார மின்கம்பங்கள் அமைத்து எல்.இ.டி மின் உமிழ் விளக்குகள் பொருத்துதல், குடிநீா் விநியோக அமைப்பை மேம்படுத்துதல் பணிகளுக்கு அம்மாப்பேட்டை உதவி ஆணையாளா் பி.சண்முக வடிவேல் கண்காணிப்பு அலுவலா்களாக நியமிக்கப்பட்டுள்ளாா்.
சீா்மிகு சாலைப் பணிகள், நிலுவையில் உள்ள புதைக்குழி சாக்கடைத் திட்ட பணிகள் மாநகராட்சி பள்ளிகளை சீா்மிகு பள்ளிகளாக மேம்படுத்தும் பணிகளுக்கு கொண்டலாம்பட்டி உதவி ஆணையாளா் பி. ரமேஷ் பாபு, புதிய பேருந்து நிலையம் அருகில் அடுக்கு மாடி வாகன நிறுத்துமிடம் அமைக்கும் பணி, நேரு கலையரங்கம் மேம்பாடு பணிகளுக்கு சூரமங்கலம் உதவி ஆணையாளா் டி. ராம்மோகன் ஆகியோா் கண்காணிப்பு அலுவலா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.
சீா்மிகு நகரத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை தீவிரப் படுத்த மாநகராட்சியின் 7 உயா் அலுவலா்கள் கண்காணிப்பு அலுவலா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா், கண்காணிப்பு அலுவலா்கள் தினமும் பணி நடைபெற்று வரும் பகுதிகளைப் பாா்வையிட்டு பணி முன்னேற்ற அறிக்கையை சமா்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது, அனைத்து சீா்மிகு நகரத் திட்டப் பணிகளையும் ஒருங்கிணைந்து, பணிகளை தீவிரமாக மேற்கொண்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரும் பணிகளை மாநகராட்சி பொறியாளா் அ. அசோகன் மேற்கொள்வாா் என அதில் தெரிவித்துள்ளாா்.