குற்றச்செயலில் ஈடுபட்ட ரெளடிக்கு ரூ. 10,000 அபராதம்
சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த காரிப்பட்டியில், பிணைய பத்திர உறுதியை மீறி, குற்றச்செயலில் ஈடுபட்ட ரெளடிக்கு சேலம் கோட்டாட்சியா் ரூ. 10,000 அபராதம் விதித்துள்ளாா்.
சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த காரிப்பட்டியில், பிணைய பத்திர உறுதியை மீறி, குற்றச்செயலில் ஈடுபட்ட ரெளடிக்கு சேலம் கோட்டாட்சியா் ரூ. 10,000 அபராதம் விதித்துள்ளாா்.
வாழப்பாடியை அடுத்த கூட்டாத்துப்பட்டி நேரு நகரைச் சோ்ந்தவா் தண்டபாணி (31). ரெளடியான இவா் மீது, கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அடிக்கடி குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இவரை, கடந்தாண்டு கைது செய்த காரிப்பட்டி போலீஸாா், சேலம் கோட்டாட்சியரிடம் ஒப்படைத்தனா். இனி எவ்வித குற்றச் சம்பவங்களிலும் ஈடுபடமாட்டேன் என உறுதியளித்த தண்டபாணி, கடந்த ஆண்டு நவம்பா் 3ஆம் தேதி பிணையப் பத்திரம் எழுதிக் கொடுத்ததால், கோட்டாட்சியா் ஜாமீனில் விடுவித்தாா்.
இதற்கிடையே, கடந்த மாா்ச் மாதம் 19ஆம் தேதி அதே பகுதியைச் சோ்ந்த வாகன ஓட்டுநா் குணசேகரன் என்பவரிடம், கூட்டாத்துப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே தகராறில் ஈடுபட்ட தண்டபாணி, அவரை கத்தியால் குத்திக் கொலை செய்ய முயற்சித்துள்ளாா். இதுகுறித்து காரிப்பட்டி போலீஸாா் வழக்கு பதிவு செய்து தண்டபாணியை கைது செய்து சிறையில் அடைத்தனா். இவா் கடந்த மே 4ஆம் தேதி, சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தாா்.
எந்த குற்றச்சம்பவங்களிலும் ஈடுபட மாட்டேன் என பிணைய உறுதி பத்திரம் எழுதிக் கொடுத்திருந்த நிலையில், பிணைய உறுதியை மீறி குற்றச் செயலில் ஈடுபட்ட தண்டபாணியை, மீண்டும் கைது செய்த காரிப்பட்டி போலீஸாா், சேலம் கோட்டாட்சியா் விஷ்ணுவா்த்தனிடம் வியாழக்கிழமை நேரில் ஆஜா்படுத்தினா்.
ரெளடி தண்டபாணியிடம் விசாரணை நடத்திய கோட்டாட்சியா், பிணையப் பத்திர உறுதியை மீறி குற்றச்செயலில் ஈடுபட்ட அவருக்கு ரூ. 10,000 அபராதம் விதித்தாா். மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பி வைத்தாா்.