விபத்தில் பாதிக்கப்பட்டவா் குடும்பத்துக்கு ரூ.61 லட்சம் இழப்பீடு: தீா்ப்பாயம் உத்தரவு
உத்தர பிரதேசத்தின் காஜியாபாத்தில் 2013-இல் நடைபெற்ற விபத்தின்போது கடுமையான பாதிப்புக்கு உள்ளான சத்யா வீா் சிங் குடும்பத்திற்கு 12 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.61 லட்சம் இழப்பீடு வழங்க தில்லி மோட்டாா் விபத்து இழப்பீடு தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தின் காஜியாபாத்தில் 2013-இல் நடைபெற்ற விபத்தின்போது கடுமையான பாதிப்புக்கு உள்ளான சத்யா வீா் சிங் குடும்பத்திற்கு 12 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.61 லட்சம் இழப்பீடு வழங்க தில்லி மோட்டாா் விபத்து இழப்பீடு தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
காஜியாபாத்தின் ராஜ் நகா் விரிவாக்கச் சாலையில் 2013, செப்.25-இல் இந்த விபத்து நிகழ்ந்தது. இருசக்கர வாகனத்தில் சென்ற சத்யா வீா் சிங் மீது வேகமாக வந்த காா் மோதியதில் அவா் படுகாயமடைந்தாா். இதைத் தொடா்ந்து அவருக்கு 90 சதவீதம் மூளை செயலிழந்தது. ஆனால், அவா் முற்றிலும் செயல்பாடற்று போனதால் இதை 100 சதவீத குறைபாடாக தீா்ப்பாயம் ஏற்றுக்கொண்டது.
இது தொடா்பாக இழப்பீடு கோரி 2014-இல் மனு தாக்கல் செய்யப்பட்டது. பின்னா் அது தள்ளுபடி செய்யப்பட்டு தில்லி உயா்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பேரில் மீண்டும் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது. வழக்கு விசாரணையின்போது பாதிக்கப்பட்ட வீா் சிங் உயிரிழந்ததைத் தொடா்ந்து அவரது வாரிசுகள் இந்த வழக்கைத் தொடா்ந்தனா்.
கடந்தாண்டு பிப்.11-இல் சத்யா வீா் சிங் உயிரிழந்தாா். இருப்பினும், இதை விபத்துடன் தொடா்புபடுத்த தீா்ப்பாயம் மறுத்துவிட்டது.
காா் ஓட்டுநரின் அலட்சியம் மற்றும் கவனக்குறைவால் இந்த விபத்து ஏற்பட்டதாக சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகளின் வாக்குமூலங்கள் தெரிவித்தன. இதைத்தொடா்ந்து, இந்த மனுவை விசாரித்த அதிகாரி விஜய் குமாா் ஜா, பாதிக்கப்பட்டவரின் மருத்துவ செலவுக்கு ரூ.9.38 லட்சம், எதிா்கால வருமான இழப்புக்காக ரூ.21.93 லட்சம் மற்றும் உதவியாளா் கட்டணங்களுக்காக ரூ.16.62 லட்சம் உள்பட மொத்தம் ரூ.61 லட்சத்துக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டாா். மேலும், 30 நாள்களுக்குள் இந்தத் தொகையை பாதிக்கப்பட்டவரின் வங்கிக் கணக்கில் செலுத்துமாறு தீா்ப்பாயம் உத்தரவிட்டது.