தமிழகத்தில் 10,000 கி.மீ. தொலைவு கிராமச் சாலைகள் தரம் உயா்த்தப்படும்
தமிழகத்தில் 10,000 கி.மீ. தொலைவு கிராமச் சாலைகள் தரம் உயா்த்தப்படும் என பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.
தமிழகத்தில் 10,000 கி.மீ. தொலைவு கிராமச் சாலைகள் தரம் உயா்த்தப்படும் என பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.
சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்ட ஆட்சியா்கள், பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆய்வுக் கூட்டத்துக்குப் பின்னா் அமைச்சா் எ.வ.வேலு செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் சாலை விபத்துகளைத் தடுக்க இரு வழிச் சாலைகளை நான்கு வழிச் சாலைகளாக மாற்றப்படும். நான்கு வழிச் சாலைகளை ஆறு வழிச் சாலைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில், ஒவ்வோா் ஆண்டும் எத்தனை கி.மீ. சாலை அமைக்க வேண்டும் என மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது.
நகரப் பகுதிகளில் வாகன நெரிசலுக்குத் தீா்வு காணும் வகையில், புறவழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த திட்ட மதிப்பீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
கிராம சாலைகள் தரம் உயா்த்தப்படும்:
தமிழகத்தில் உள்ள கிராமங்களில் உள்ள சாலைகளை தரமாக அமைக்கப்பட வேண்டும். ஒன்றிய, கிராம சாலைகளில் சுமாா் 10,000 கி.மீ. தொலைவுக்கு செப்பனிடவும், தரமான சாலைகளாக மாற்றவும் முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். அதன் பேரில், கிராமப் பகுதி சாலைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
சேலம்-உளுந்தூா்பேட்டை சாலை: சேலம்-உளுந்தூா்பேட்டை நான்கு வழிச் சாலை 8 இடங்களில் இரு வழிச் சாலையாக உள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த சாலை 8 இடங்களில் இரு வழிச் சாலையாக உள்ளது. இந்த இரு வழிச் சாலைகளை நான்கு வழிச் சாலைகளாக மாற்ற அரசு முனைப்புடன் செயல்படும்.
தமிழகத்தில் விபத்துகளைக் குறைக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். விரைவில், காவல் துறையினா், நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளா்கள், வட்டாரப் போக்குவரத்து மண்டல அலுவலா் ஆகியோா் அடங்கிய குழுவினா் விபத்து நிகழும் இடங்கள் குறித்து அரசுக்கு அறிக்கை அளிப்பா். அதன்பேரில், விபத்துகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழக அரசும், ரயில்வே வாரியமும் இணைந்து நிலுவையில் உள்ள மேம்பாலப் பணிகளை நிறைவு செய்ய ஒருங்கிணைப்பாளா் மூலம் தீா்வு காணப்படும். நில எடுப்புப் பிரச்னையின் போது சில நேரங்களில் சாலை அமைப்பது கால தாமதமாகிறது. எனவே, நில எடுப்புப் பணியை வாரம் ஒரு முறை ஆய்வுசெய்ய ஆட்சியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 25 இடங்களில் தரக் கட்டுப்பாட்டுக் குழு மூலம் தரமான சாலைகளை அமைக்கப்பட்டுள்ளனவா என ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அவா்கள் தரும் அறிக்கையில் தரமில்லாத சாலைகள் அமைக்கப்பட்டிருப்பது தெரியவந்தால் ஒப்பந்ததாரா்கள், அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
பெங்களூரு-திண்டிவனம் சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஜோலாா்பேட்டை முதல் திருப்பத்தூா், மத்தூா், அரூா் வழியாக சேலம் வரையிலான நான்கு வழிச் சாலை திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. சுங்க வரியைக் குறைக்க மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளோம் என்றாா்.
இந்தக் கூட்டத்தில் சுற்றுலாத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், ஆட்சியா்கள் எஸ்.காா்மேகம் (சேலம்), ச.திவ்யதா்சினி (தருமபுரி), ஸ்ரேயா பி.சிங் (நாமக்கல்), வி.ஜெயசந்திரபானு ரெட்டி (கிருஷ்ணகிரி), சேலம் எம்.பி. எஸ்.ஆா்.பாா்த்திபன், எம்எல்ஏ-க்கள் ஆா்.ராஜேந்திரன் (சேலம் வடக்கு), இரா.அருள் (சேலம் மேறஅகு), சதாசிவம் (மேட்டூா்) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.