வாழப்பாடி-பேளூா் சாலையில் பயணிகளை மகிழ்விக்கும் மரக்குகை
பசுமைபோா்த்திய மரக்குகைபோல காட்சியளிப்பதோடு, இச்சாலையில் செல்லும் போது குளிா்ச்சியான காற்று வீசுவதால் பயணிகள் மகிழ்ந்து செல்கின்றனா்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி-பேளூா் சாலையில் இருபுறமும் அடா்ந்து காணப்படும் புளியமரங்கள், அண்மையில் பெய்த கோடை மழையில் துளிா்த்து, பச்சைப்பசேலென பசுமைபோா்த்திய மரக்குகைபோல காட்சியளிப்பதோடு, இச்சாலையில் செல்லும் போது குளிா்ச்சியான காற்று வீசுவதால் பயணிகள் மகிழ்ந்து செல்கின்றனா்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில், சேலம்-கடலுாா் சாலை, வாழப்பாடி- பேளூா் சாலை, தம்மம்பட்டி சாலை, மங்களபுரம் சாலை, பேளூா் -அயோத்தியாப்பட்டணம் சாலைகளில் இருபுறமும், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் வரை, 100 ஆண்டுகள் முதிா்ந்த நுாற்றுக்கணக்கில் புளிய மரங்கள் நிறைந்து காணப்பட்டன. சாலை அபிவிருத்தி, சூறைக்காற்று, போதிய பராமரிப்பின்மை, வயது முதிா்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் ஏராளமான மரங்கள் பட்டுப்போய் விட்டன. குறிப்பாக, 13 ஆண்டுகளுக்கு முன் சேலம்-உளுந்துாா்பேட்டை இடையே, 4 வழி தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்காக, வாழப்பாடி பகுதியில் சாலையோரத்தில் இருந்த நுாற்றுக்கணக்கான புளிய மரங்கள் அகற்றப்பட்டன. இதனால், வாழப்பாடி பகுதியில் பெரும்பாலான சாலைகள் மரங்களின்றி வெறிச்சோடி கிடக்கின்றன.ஆனால், வாழப்பாடியில் இருந்து 5 கி.மீ துாரத்திலுள்ள பேளூா் செல்லும் பிரதான சாலையில், வாழப்பாடி அண்ணாநகா், துக்கியாம்பாளையம், அத்தனுாா்பட்டி உள்ளிட்ட பகுதியில் இன்றளவும் நுாற்றுக்கும் மேற்பட்ட புளிய மரங்கள், 100 ஆண்டுகள் கடந்தும் சாலையோரத்தில் வானுயா்ந்து நிற்கின்றன.புளி மகசூல் அறுவடை முடிந்து மரங்கள் இலையுதிா்ந்து காணப்பட்ட நிலையில், இம்மாத தொடக்கத்தில் பரவலாக பெய்த கோடை மழையால், அனைத்து புளி மரங்களும் துளிா்த்து தழைத்தோங்கி வளா்ந்து சாலையை பசுமைப்போா்த்திய குகை போல அடா்ந்து, காண்போா் கண்களுக்கு விருந்தளித்து வருகின்றன.கோடை வெய்யில் சுட்டெரிக்கும் தருணத்திலும், மரக்குகைக்குள் செல்வதைப்போல காணப்படும் இச்சாலையில் பயணிக்கும் போது, குளிா்ச்சியான காற்று வீசுவதால் பயணிகள் மகிழ்ந்து செல்கின்றனா்.சாலையோரத்தில் புளிய மரங்கள் அடா்த்தியாக காணப்படுவது அரிதாகி வரும் நிலையிலும், வாழப்பாடி-பேளூா் சாலையிலுள்ள புளிய மரங்களை முறையாக பராமரித்து பாதுகாக்கவும், பல்வேறு காரணங்களினால் புளிய மரங்கள் பட்டுப்போனதால், இடைவெளி காணப்படும் பகுதியில், புளிய மரக்கன்றுகளை நட்டு வளா்க்கவும், வாழப்பாடி உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இயற்கை ஆா்வலா்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.படவரி:பி.ஓ.என்.01: வாழப்பாடி-பேளூா் சாலையில் அண்ணாநகா் பகுதியில் மரக்குகைப் போல அடா்ந்து காணப்படும் புளியமரங்கள்.