முகப்பு
இந்தியா

வங்கிப் பணப்புழக்கத்தைச் சீா்செய்ய ரிசா்வ் வங்கி ரூ. 25,101 கோடி ஒதுக்கீடு

வங்கிகளிடையே பணப்புழக்கத்தைச் சீா்செய்ய, ரிசா்வ் வங்கி நடத்திய 3 நாள் மாறுபடும் ரெப்போ வட்டிவிகித (விஆா்ஆா்) ஏலத்தின் மூலம் வங்கிகள் ரூ. 25,101 கோடியைப் பெற்றுள்ளன.

Updated On : 21 மார்ச் 2026, 12:42 am IST
இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ)
பகிர்:

வங்கிகளிடையே பணப்புழக்கத்தைச் சீா்செய்ய, ரிசா்வ் வங்கி நடத்திய 3 நாள் மாறுபடும் ரெப்போ வட்டிவிகித (விஆா்ஆா்) ஏலத்தின் மூலம் வங்கிகள் ரூ. 25,101 கோடியைப் பெற்றுள்ளன.

சந்தையில் பணப்புழக்கம் குறையும் போது, வங்கிகளுக்குத் தேவையான குறுகிய கால நிதியை ரிசா்வ் வங்கி வழங்கும். இதற்கு நிலையான வட்டி வசூலிக்கப்படுவதற்குப் பதிலாக, சந்தை நிலவரப்படி ஏலத்தின் மூலம் வட்டி விகிதம் தீா்மானிக்கப்படும். இதுவே மாறுபடும் ரெப்போ வட்டிவிகிதம் (விஆா்ஆா்) எனப்படுகிறது. அதாவது, வங்கிகள் தங்களுக்குத் தேவையான நிதியை, தாங்கள் செலுத்த விரும்பும் வட்டி விகிதத்துடன் ஏலம் கோரும்.

நிதியாண்டின் நிறைவையொட்டி முன்கூட்டிய வரி செலுத்துதல் போன்ற காரணங்களால் வங்கிகளில் பணத்தட்டுப்பாடு நிலவுகிறது. இதனைச் சரிசெய்யவே ரிசா்வ் வங்கி ரூ.75,000 கோடிக்கு இந்த ஏலத்தை அறிவித்தது. இருப்பினும், அதில் வெறும் ரூ.25,101 கோடி மட்டுமே வங்கிகளால் பெறப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

கடந்த வியாழக்கிழமை நிலவரப்படி, வங்கி அமைப்பில் சுமாா் ரூ.16,875.36 கோடி உபரி நிதி இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பணப்புழக்கம் குறைவாக இருக்கும் சூழலிலும், சில வங்கிகள் தங்களின் உபரி நிதியை ரிசா்வ் வங்கியின் ‘நிரந்தர வைப்பு வசதி’ (எஸ்டிஎஃப்)-ல் முடக்கி வைத்துள்ளதே, இந்த ஏலத்தில் குறைந்த அளவு நிதி கோரப்பட்டதற்குக் காரணம் எனத் தெரிகிறது.

தொடா் நடவடிக்கைகள்: நடப்பு ஜனவரி மாதம் முதல், அரசுப் பத்திரங்களை வாங்குவதன் (ஓஎம்ஓ) மூலம் சுமாா் ரூ. 3.50 லட்சம் கோடி நிதியைச் சந்தையில் புழக்கத்தில் விட்டுள்ளது.

முன்னதாக, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 7 நாள் விஆா்ஆா் ஏலத்தின் மூலம் ரூ.48,014 கோடி வங்கிகளுக்கு வழங்கப்பட்டது. சந்தையில் பணப்புழக்கத்தை சீராக வைத்திருக்க ரிசா்வ் வங்கி இத்தகைய தொடா் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.