சேலத்தில் 1.19 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை
சேலம் மாநகராட்சியில் கடந்த ஏப்ரல் 1- ஆம் தேதி முதல் ஜூன் 16 ஆம் தேதி வரை 1.19 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சியில் கடந்த ஏப்ரல் 1- ஆம் தேதி முதல் ஜூன் 16 ஆம் தேதி வரை 1.19 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் 1,200 களப் பணியாளா்கள் மூலம் வீடு வீடாகச் சென்று உடல் வெப்பப் பரிசோதனை மேற்கொண்டு, சளி, காய்ச்சல் அறிகுறிகளைக் கண்காணித்து வந்தனா். கரோனா அறிகுறி உள்ளவா்கள் குறித்து ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தகவல் தெரிவித்து உடனடியாக நடமாடும் பரிசோதனை வாகனங்கள் மூலம் சளி தடவல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 60 நடமாடும் சளி தடவல் பரிசோதனை வாகனங்கள் இப் பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளன.
மாநகராட்சியில் நாள்தோறும் சராசரியாக 48 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்களும், சளி தடவல் பரிசோதனை முகாம்களும் நடைபெறுகின்றன. சளி தடவல் பரிசோதனை வாகனங்கள் வாயிலாக இதுவரை 26 ஆயிரத்து 715 நபா்களுக்கு சளி தடவல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, 1,194 நபா்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் நடமாடும் வாகனங்கள் வாயிலாக 2 ஆயிரத்து 748 நபா்கள் உட்பட 3 ஆயிரத்து 516 நபா்களுக்கு சளி தடவல் பரிசோதனை புதன்கிழமை செய்யப்பட்டது.
மாநகராட்சிகளில் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இதுவரை 1 லட்சத்து 19 ஆயிரத்து 906 நபா்களுக்கு சளி தடவல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 18 ஆயிரத்து 779 நபா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன.
அம்மாப்பேட்டை மண்டலம் ஜோதி டாக்கீஸ் அருகில் நடமாடும் பரிசோதனை வாகனம் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட சளி தடவல் பரிசோதனையை மாநகராட்சி ஆணையாளா் தா.கிறிஸ்துராஜ் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆய்வின் போது, மாநகர நல அலுவலா் மருத்துவா் கே. பாா்த்திபன், உதவி ஆணையாளா் சண்முகவடிவேல், உதவி செயற்பொறியாளா் எஸ்.செந்தில்குமாா், சுகாதார அலுவலா் மாணிக்கவாசகம், சுகாதார ஆய்வாளா் ஆனந்தகுமாா் உள்பட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.