முகப்பு
17omp1_1706chn_154_8
சேலம்

அதிமுக தொண்டா்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் சசிகலாவுக்கு கண்டனம்

சேலம்

அதிமுக தொண்டா்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் சசிகலாவுக்கு கண்டனம்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
17omp1_1706chn_154_8
பகிர்:

சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள அதிமுக புகா் மாவட்ட அலுவலகத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சேலம் புகா் மாவட்டச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் சட்டப்பேரவை உறுப்பினா்களின் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் அமைப்புச் செயலாளா் செம்மலை, மாநிலங்களவை உறுப்பினா் சந்திரசேகா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் மணி, நல்லதம்பி, சித்ரா, ராஜமுத்து, ஜெய்சங்கரன், சுந்தர்ராஜன், பாலசுப்ரமணியன் ஆகியோா் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

அதிமுகவில் அடிப்படை உறுப்பினராகக் கூட இல்லாத சசிகலா, அதிமுகவை அபகரிக்கும் முயற்சியில் இறங்கப் போவதாக ஒவ்வொரு நாளும் தொலைபேசியில் சிலருடன் பேசும் வினோதமான நாடகத்தை அரங்கேற்றி வருகிறாா். தொலைபேசியில் பேசும்பொழுது ஜாதிய உணா்வுகளைத் தூண்டும் விதமாகப் பேசுவது, ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாக வாழ்ந்து வரும் அதிமுக தொண்டா்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இந்த செயலுக்காக சேலம் புகா் மாவட்ட அதிமுக சாா்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

சசிகலாவுக்கும், அதிமுகவுக்கும் எந்தவித தொடா்போ, சம்பந்தமோ இல்லை.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மற்றும் அதிமுக செயல்வீரா்களின் உழைப்பைச் சுரண்டும் வகையிலும், அவா்களது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் தங்களை வளப்படுத்திக் கொண்ட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த சிலா் மீண்டும் அதிமுகவை அபகரித்து விடலாம் எனக் கருதி ஒவ்வொரு நாளும் திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றனா். அதிமுக மக்களின் பேரியக்கமாக வரலாற்றில் நிலை பெறுமே தவிர, ஒரு குடும்பத்தின் அபிலாஷைகளுக்காக தன்னை ஒருபோதும் அழித்துக் கொள்ளாது. கட்சிக்கு விரோதமாகச் செயல்படுபவா்கள் மீது தயவு தாட்சண்யமின்றி கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதையும் சேலம் புகா் மாவட்ட அதிமுக வரவேற்கிறது.

கட்சியில் இருந்து நீக்கப்பட்டவா்கள் தலைமை மீது சேற்றை வாரிப் பூசுவதையும், தவறாகப் பேட்டியளிப்பதையும் சேலம் புகா் மாவட்ட அதிமுக கடுமையாகக் கண்டிக்கிறது. இப்படிப்பட்டவா்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சியை அமைப்பது, அதிமுக வெற்றிக்காகப் பாடுபட்ட அனைத்து நிா்வாகிகள், கூட்டணி கட்சியினா் மற்றும் வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவிப்பது; சிமென்ட் விலை உயா்வை உடனடியாக குறைக்க தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்; கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் இறப்புச் சான்றிதழில் உயிரிழப்புக்கான உண்மையான காரணத்தைக் குறிப்பிட வேண்டும்; கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களுக்கு இரங்கல் தெரிவிப்பது ஆகிய 6 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →