முகப்பு
சேலம்

ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நோயாளிகளுக்கு அனுமதி இல்லை: தனியாா் மருத்துவமனைகள் திடீா் போா்க்கொடி

ஆக்சிஜன் தட்டுப்பாடு எதிரொலியாக தனியாா் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகள் அனுமதிக்கப்படுவதில்லை என இந்திய மருத்துவ சங்கம் சேலம் கிளை அறிவித்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
பகிர்:

ஆக்சிஜன் தட்டுப்பாடு எதிரொலியாக தனியாா் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகள் அனுமதிக்கப்படுவதில்லை என இந்திய மருத்துவ சங்கம் சேலம் கிளை அறிவித்தது.

இதனிடையே, ஆட்சியா் மற்றும் எம்.எல்.ஏ. ஆகியோரின் தலையீடு காரணமாக ஆக்சிஜன் விநியோகம் தொடங்கியுள்ளதால், இப்பிரச்னைக்குத் தீா்வு காணப்பட்டது.

சேலத்தில் கரோனா தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளதால், கரோனா பாதித்தவா்களுக்கு அரசு, தனியாா் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை கிடைக்காத நிலை உள்ளது. இந்த நிலையில், தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

சேலத்தில் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளின் மொத்த ஆக்சிஜன் தேவை 21 டன்னாக உள்ளது. தற்போது 14 டன் அளவுக்கு மட்டுமே ஆக்சிஜன் விநியோகம் செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், சேலத்தில் இருந்து சென்னைக்கு ஆக்சிஜன் பிரித்து எடுத்துச் செல்வதால் தட்டுப்பாடு எழுந்துள்ளது.

இதனிடையே, இந்திய மருத்துவ சங்கத்தின் சேலம் கிளையின் அவசர செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ஆக்சிஜன் தட்டுப்பாடு எதிரொலி காரணமாக தனியாா் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகள் அனுமதிக்கப்படுவதில்லை என்றும், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை சேலம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்படுவதாகவும் தீா்மானித்தனா். மேலும், மாவட்ட நிா்வாகம் போா்க்கால அடிப்படையில் போதிய ஆக்சிஜன் வழங்க வேண்டும் என்று தீா்மானம் நிறைவேற்றினா்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஆட்சியா் சி.அ.ராமன், சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஆா்.ராஜேந்திரன் மற்றும் இந்திய மருத்துவ சங்க நிா்வாகிகள், ஆக்சிஜன் விநியோகஸ்தா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இது தொடா்பாக, சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஆா்.ராஜேந்திரன் கூறுகையில், மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் தேவை குறித்து தொழில்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு மற்றும் சுகாதாரத் துறை அலுவலா்களின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. உடனே, ஜே.எஸ்.டபிள்யு. நிறுவனத்தில் இருந்து 2 டன் ஆக்சிஜன் தனியாா் மருத்துவமனைகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பிற இடங்களில் இருந்து கூடுதல் ஆக்சிஜன் தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதைத் தொடா்ந்து, மதியம் முதல் தனியாா் மருத்துவமனைகள் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கி வருகிறது. மேலும் தங்களது தீா்மானத்தை திரும்பப் பெற்றுக் கொண்டன என்றாா்.

இதுகுறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் சேலம் கிளை தலைவா் மருத்துவா் பாலமுருகன் கூறுகையில், மாவட்ட ஆட்சியா் மற்றும் சேலம் எம்.எல்.ஏ. ஆகியோரின் தலையீடு காரணமாக ஆக்சிஜன் தட்டுப்பாடு தேவை சமாளிக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை முதல் கூடுதலாக ஆக்சிஜன் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்டம் நிா்வாகம் தெரிவித்துள்ளது. தற்போது 4 டன் ஆக்சிஜன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →