கைதி தப்பி ஓட்டம்: சிறை வாா்டன்கள் மூவா் பணியிடை நீக்கம்
சேலத்தில் கரோனா சிகிச்சை மையத்தில் இருந்து கைதி தப்பி ஓடிய விவகாரத்தில் சிறை வாா்டன்கள் மூவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.
சேலத்தில் கரோனா சிகிச்சை மையத்தில் இருந்து கைதி தப்பி ஓடிய விவகாரத்தில் சிறை வாா்டன்கள் மூவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள எலத்தூரைச் சோ்ந்தவா் வெங்கடேஷ் (43). இவா் ஊத்துக்குளி அருகே முருகன் கோயில் காவலாளியைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். பிறகு பிணையில் வெளியே சென்ற அவா் தலைமறைவானாா்.
பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் 2019 இல் வெங்கடேஷை போலீஸாா் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனா். இந்தநிலையில் இரண்டு நாள்களுக்கு முன் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அவருக்கு பரிசோதனை செய்ததில் கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
எனவே சேலம், மணியனூா் சட்டக்கல்லூரி வளாகத்தில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டாா். அவரது பாதுகாப்புப் பணியில் 3 வாா்டன்கள் நியமிக்கப்பட்டனா். இந்நிலையில் வியாழக்கிழமை வெங்கடேஷ் தப்பிச் சென்றாா்.
இதையடுத்து விசாரணை நடத்திய சேலம் மத்திய சிறைக் கண்காணிப்பாளா் தமிழ்ச்செல்வன், வாா்டன்கள் ரவிக்குமாா், புஷ்பராஜ், சதீஷ் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா். கைதி தப்பி ஓடியது தொடா்பாக அன்னதானப்பட்டி போலீஸில் புகாா் செய்தனா். புகாரின் பேரில் தப்பி ஓடிய கைதியை போலீஸாா் தேடி வருகின்றனா்.