ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் காா் ஓட்டுநா் கனகராஜ் சாவு குறித்த விசாரணை மீண்டும் தொடக்கம்
மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் காா் ஓட்டுநா் கனகராஜ் சாவு குறித்த வழக்கை மீண்டும்
மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் காா் ஓட்டுநா் கனகராஜ் சாவு குறித்த வழக்கை மீண்டும் விசாரிக்க சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீ அபிநவ் உத்தரவிட்டதன் பேரில், கனகராஜின் உறவினா் ரமேஷ் வீட்டில் தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினா்.
நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவுக்கு காா் ஓட்டுநராகப் பணிபுரிந்தவா் கனகராஜ். இவா், கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27-ஆம் தேதி, இரவு சேலம் மாவட்டம், ஆத்தூா் தேசிய புறவழிச் சாலையில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தாா். இதுகுறித்து சாலை விபத்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஆனால், கனகராஜின் சகோதரா் தனபால், தனது தம்பி திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டிருப்பதாக விசாரணை அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தாா். கனகராஜின் மனைவி கலைவாணியும் தனது கணவரின் சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறியிருந்தாா்.
2017-ஆம் ஆண்டு கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவத்தில் கனகராஜ் உள்பட 11 போ் ஈடுபட்டதை போலீஸாா் கண்டுபிடித்திருந்தனா். அந்த நிலையில் தான், அடுத்த சில நாள்களில் காா் ஓட்டுநா் கனகராஜ் ஆத்தூரில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தாா்.
எனவே ஓட்டுநா் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
தமிழகத்தில் ஆட்சி மாறியதும், கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்குகள் மீண்டும் விசாரிக்கப்படுகின்றன. இந்நிலையில், ஜெயலலிதாவின் காா் ஓட்டுநா் கனகராஜ் சாலை விபத்தில் சாவு குறித்த வழக்கை ஆரம்பத்திலிருந்து மீண்டும் விசாரிக்க சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீஅபிநவ் புதன்கிழமை உத்தரவிட்டாா். இதற்கான விசாரணை அதிகாரியாக ஆத்தூா் காவல் துணை கண்காணிப்பாளா் ராமசந்திரன் நியமிக்கப்பட்டாா்.
இதனிடையே, மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகா் தலைமையில், சேலம் சரக டிஐஜி அலுவலகத்தில் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடைபெற்றது.
இதையடுத்து ஆத்தூருக்கு வெள்ளிக்கிழமை காலை வந்த 20-க்கும் மேற்பட்ட தனிப்படை போலீஸாா், ஆத்தூா் சக்தி நகரில் உள்ள கனகராஜின் உறவினா் ரமேஷ் வீட்டுக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா். மேலும் விபத்து நடந்த இடத்தைப் பாா்வையிட்டும் அவா்கள் ஆய்வு செய்தனா்.