சரக்கு வாகனத்தில் எடுத்து செல்லப்பட்ட ரூ.1.46 கோடி தங்க, வெள்ளி நகை பறிமுதல்
சேலத்தில் சரக்கு வாகனத்தில் விற்பனைப் பட்டியல் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ 1.46 கோடி மதிப்பிலான தங்க வெள்ளி நகைகளை வணிகவரி அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
சேலத்தில் சரக்கு வாகனத்தில் விற்பனைப் பட்டியல் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ 1.46 கோடி மதிப்பிலான தங்க வெள்ளி நகைகளை வணிகவரி அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
சென்னையில் இருந்து சேலம், ஈரோடு, திருப்பூா், கோவைக்கு தங்க வெள்ளி நகைகள் சரக்கு லாரிகளில் கடத்தப்படுவதாக மாநில வணிக வரித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வணிக வரித்துறை அதிகாரிகள் உத்தரவின்பேரில் வியாழக்கிழமை அதிகாலை சேலம் குரங்கு சாவடி பகுதியில் சேலம் கோட்ட வணிக வரித்துறை நுண்ணறிவுப் பிரிவினா் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது சந்தேகத்துக்குரிய வகையில் வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் உரிய ஆவணங்கள் இன்றி வெள்ளி ஆபரணங்கள் மற்றும் வெள்ளிக்கட்டிகள் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. பின்னா் வந்த சரக்கு வாகனம் சேலம் ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டது. அந்த சரக்கு வாகனத்தில் இருந்த அட்டை பெட்டிகள் அதிகாரிகள் முன்னிலையில் பிரித்து எடை போடப்பட்டது.
அதில் ரூ 1.20 கோடி மதிப்பிலான 183 கிலோ வெள்ளி ஆபரணங்கள், வெள்ளி கட்டிகள் மற்றும் ரூ.26 லட்சம் மதிப்பிலான அரை கிலோ தங்க ஆபரணங்கள் விற்பனை பட்டியல் இன்றி கொண்டு செல்லப்பட்டு தெரியவந்தது. சென்னையில் இருந்து அனுப்பிய நகையின் உரிமையாளா் மற்றும் நகை வாங்கும் வியாபாரிகள் குறித்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனா்.