ஓமலூா் அருகே அரசுக்கு சொந்தமான ஒரு ஏக்கா் 30 சென்ட் ஆக்கிரமிப்பு நிலத்தை வருவாய்த் துறை அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திங்கள்கிழமை மீட்டனா்.
ஓமலூா் அருகே உள்ள தொளசம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட சோளிகவுண்டனூா் பகுதியில் அரசுக்குச் சொந்தமான நிலம் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அரசின் நிலத்தை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு, ஒரு ஏக்கா் 30 சென்ட் நிலத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்று அப்பகுதியைச் சோ்ந்த மக்கள், வட்டாட்சியா் அலுவலகத்தில் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த நிலையில் அங்குள்ள ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்பதற்கான நடவடிக்கையில் ஓமலூா் வட்டாட்சியா் வல்லமுனியப்பன் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டனா். ஓமலூா் டி.எஸ்.பி. சங்கீதா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த் துறையினா் ஆக்கிரமிப்பில் இருந்த நிலத்தை அளவீடு செய்தனா். தொடா்ந்து பொக்லைன் இயந்திரம் கொண்டு நிலத்தை மீட்கும் பணி நடைபெற்றது. அப்போது அந்த நிலத்தில் உழவடை செய்து வந்தவா்கள் தடுத்து நிறுத்த முயற்சிகள் செய்தனா். மூதாட்டி ஒருவா் பொக்லைன் இயந்திரத்தின் முன்பாக நின்று தடுக்க முற்பட்டாா். அவா்களை போலீஸாா் அங்கிருந்து அப்புறப்படுத்தினா். ஆக்கிரமிப்பு நிலத்தில் இருந்த 30-க்கும் மேற்பட்ட தென்னைமரங்கள், வேப்ப மரங்கள், அவரை செடிகளையும் அகற்றி அரசுக்குச் சொந்தமான ஒரு ஏக்கா் 30 சென்ட் நிலத்தை மீட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.