முகப்பு
சேலம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 68-வது ஆண்டாக 101.32 அடியை எட்டியுள்ளது.

Updated On : 12 ஜூலை, 2022 at 2:33 PM
பகிர்:

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 68-வது ஆண்டாக 101.32 அடியை எட்டியுள்ளது.

கடந்த ஒரு மாத காலமாக காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2500 கன அடிக்கு கீழே சரிந்தது. இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருந்ததால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி 100 அடியாக உயர்ந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் 257 நாட்களுக்குப் பிறகு கடந்த 8-ம் தேதி 100அடிக்கு கீழே சரிந்தது.

Advertisement

தற்போது கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் கன மழை பெய்து வருகிறது. கனமழையின் காரணமாக கபினி கிருஷ்ணராஜ சாகர் அணை நிரம்பியது. அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரியில் உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. உபரி நீர் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 95,138 கன அடியாக அதிகரித்துள்ளது.

நீர்வரத்து அதிகரித்ததால் படிப்படியாக குறைந்து வந்த மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவிலிருந்து மீண்டு மெல்ல உயரத் தொடங்கியது.

மேட்டூர் அணையின் வரலாற்றில் 68-வது ஆண்டாக நான்கு நாட்களுக்குப் பிறகு இன்று அதிகாலை மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் 100 அடியாத உயர்ந்தது.

இன்று முற்பகலில் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 95,138 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 15,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.  நீர் வரத்து அதிகரித்து வருவதால் காவிரி கரையில் இருந்த மீனவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நீரின் வேகம் அதிகமாக உள்ளதால் கோட்டையூர் அடிப்பாலாறு பகுதிகளில் உள்ள மீனவர்கள் இன்று மீன் பிடிக்கச் செல்லவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.